வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது

ஜன 05, 2024

ACJU/NGS/2024/291

2024.01.05 (1445.06.21)

 

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து இறைவனின் அருளை பெற்றுக்கொள்ளுங்கள்.

 

"وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ وَاَحْسِنُوْا ۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏"

“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (2:195)

 

"اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ"

"நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறையச்சமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கிறார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கிறான்." (16:128)

 

عن أبي هريرة رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : من نفس عن مؤمن كربة من كرب الدنيا ، نفس الله عنه كربة من كرب يوم القيامة ، ومن يسر على معسر ، يسر الله عليه في الدنيا والآخرة ، ومن ستر مسلما ، ستره الله في الدنيا والآخرة ، والله في عون العبد ، ما كان العبد في عون أخيه ، (صحيح مسلم:2699 )

“யார் ஒரு முஃமினை விட்டும் உலகத்தின் சிரமங்களிலிருந்து ஒரு சிரமத்தை போக்குகிறாரோ அல்லாஹு தஆலா அவருடைய மறுமை நாளின் சிரமங்களிலிருந்து ஒரு சிரமத்தை நீக்குவான். யார் கஷ்டத்தில் உள்ளவருக்கு (உதவி செய்வதன் மூலம்) இலேசாக்குவாரோ அல்லாஹ் அவர் மீது உலகிலும் மறுமையிலும் (உதவி செய்வதன் மூலம்) இலேசாக்குவான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை உலகிலும் மறுமையிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவிபுரியும் காலமெல்லாம் அல்லாஹ் அந்த அடியானுக்கு உதவி செய்து கொண்டிருப்பான்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: 2699)

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் எம்மால் முடியுமான உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்குவது அல்லாஹ்வின் பொருத்தமும் உதவியும் எமக்குக் கிடைப்பதற்கும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும் காரணமாக அமைகின்றன.

ஆதலால், வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி செய்யும் விடயத்தில் அந்தந்த பிரதேசத்திலுள்ள ஜம்இய்யாவின் கிளைகள் உதவி புரிவோருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

(உதவி புரிவது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் - 0777-571876 - அவர்களை தொடர்பு கொள்ளவும்.)


அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 05 ஜனவரி 2024 10:45

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.