2021.02.23 (1442.07.10) ஆம் திகதி ACJU/FTW/2021/005-420 என்ற குறிப்பீட்டிலக்கத்தில் வெளியிடப்பட்ட பத்வா
கேள்வி : வஸிய்யத் தொடர்பான மார்க்க விளக்கத்தைத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்?
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் தோழர்கள் மீதும் உண்டாவதாக!
‘வஸிய்யத்’ என்பது தனக்குச் சொந்தமான சொத்துக்கள் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை தனது மரணத்தின் பின் பிறருக்குத் தானமாக வழங்கும்படி கூறுவதாகும்.
ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது தனது சொத்திலிருந்து தான் விரும்பும் அளவை வேறு ஒருவருக்கு சொந்தமாக்கிக் கொடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அந்த வகையில் உங்களது வளர்ப்புத் தந்தை அவர் உயிரோடு இருக்கும் போது அவரது சொத்துக்களில் உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொடுத்த சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்குச் சொந்தமானவையாகும்.
இஸ்லாத்தில் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு அனந்தரச் சொத்தில் பங்கு கிடையாது. அவர்களுக்கு சொத்துக் கிடைக்க வேண்டுமென்றால் மரணித்தவர் தான் மரணிக்க முன் வஸிய்யத் செய்திருக்க வேண்டும் அல்லது சொத்து கிடைக்கும் அனந்தரக்காரர்கள் தமக்கு கிடைக்கும் சொத்திலிருந்து தாம் விரும்பும் அளவை வளர்ப்புப் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியும்.
‘வஸிய்யத்’ செய்யும்பொழுது பின்வரும் இரு விடயங்களையும் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.
1. தனது முழுச்சொத்திலிருந்தும் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக ‘வஸிய்யத்’ செய்யாதிருத்தல். இதற்கு ஸஃத் இப்னு அபி வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சொத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கை ‘வஸிய்யத்’ செய்யும்படி கூறிவிட்டு அதுவும் அதிகமே என்று கூறிய ஹதீஸ் ஆதரமாக உள்ளது.
2. தனது அனந்தரக்காரர்களுக்கு ‘வஸிய்யத்’ செய்யாதிருத்தல்.
والوصية لغة الإيصال ... وشرعا تبرع بحق مضاف ولو تقديرا لما بعد الموت (كتاب الوصايا – تحفة المحتاج)
عن سعد بن أبي وقاص رضي الله عنه قال : جاء النبي صلى الله عليه و سلم يعودني وأنا بمكة وهو يكره أن يموت بالأرض التي هاجر منها قال ( يرحم الله ابن عفراء ) . قلت يا رسول الله أوصي بمالي كله ؟ قال ( لا ) . قلت فالشطر ؟ قال ( لا ) . قلت الثلث ؟ قال ( فالثلث والثلث كثير إنك إن تدع ورثتك أغنياء خير من أن تدعهم عالة يتكففون الناس في أيديهم وإنك مهما أنفقت من نفقة فإنها صدقة حتى اللقمة التي ترفعها إلى في امرأتك وعسى الله أن يرفعك فينتفع بك ناس ويضر بك آخرون ) . ولم يكن له يومئذ إلا ابنة. (باب أن يترك ورثته أغنياء خير من أن يتكففوا الناس, كتاب الوصايا, صحيح البخاري) 2742
அதாவது வாரிசுரிமைச் சட்டத்தின் அடிப்படையில், சொத்துக்களுக்கு உரிமையாகும் அனந்தரக்காரர்களுக்கு ‘வஸிய்யத்’ செய்வது கூடாது.
عن عمرو بن خارجة رضي الله عنه أن رسول الله صلى الله عليه و سلم قال : لا وَصِيَّةَ لِوَارِثٍ إِلاَّ أَنْ يُجِيزَ الْوَرَثَةُ. (سنن البيهقي)
(ஏனைய) அனந்தரக்காரர்கள் அனுமதியளித்தாலே அன்றி, தனது அனந்தரக்காரர்களுக்கு (சொத்துக்கிடைக்கும் படி) ‘வஸிய்யத்’ செய்ய முடியாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அம்ர் இப்னு காரிஜா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனன் அல்-பைஹக்கீ)
அவ்வாறு தனது முழுச்சொத்திலிருந்தும் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக ‘வஸிய்யத்’ செய்திருந்தால், அல்லது தனது சொத்துக்களுக்கு உரிமையாகும் அனந்தரக்காரர்களுக்கு ‘வஸிய்யத்’ செய்திருந்தால், சொத்துடையவர் மரணித்த பின்னர் அவ்வஸிய்யத்தை நிறைவேற்றுவதற்கு அனந்தரக்காரர்கள் அனைவரினதும் அனுமதியைப் பெறுதல் வேண்டும். அவர்கள் அனைவரும் அனுமதியளித்தால், அவ்வஸிய்யத்தை நிறைவேற்றலாம். அவ்வாறு அனுமதியளிக்காவிட்டால் அவ்வஸிய்யத்தை நிறைவேற்ற முடியாது. அனந்தரக்காரர்களில் சிலர் அனுமதியளித்து, சிலர் நிராகரித்தால் நிராகரித்தவர்களுடைய பங்குகளை அவர்களுக்கே முழுமையாகக் கொடுத்துவிட்டு, ‘வஸிய்யத்’ செய்யப்பட்ட அளவிலிருந்து அனுமதி அளித்தவர்களின் பங்கை ‘வஸிய்யத்’ செய்யப்பட்டவருக்கு கொடுக்கலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
يَنْبَغِي أَنْ لَا يُوصِيَ بِأَكْثَرَ مِنْ ثُلُثِ مَالِهِ، فَإِنْ زَادَ وَرَدَّ الْوَارِثُ بَطَلَتْ فِي الزَّائِدِ، وَإِنْ أَجَازَ فَإِجَازَتُهُ تَنْفِيذٌ (كتاب الوصايا, منهاج الطالبين للنووي)
( و ) تصح الوصية وإن لم تخرج من الثلث ( لوارث ) خاص غير حائز بغير قدر إرثه ( في الأظهر إن أجاز باقي الورثة ) المطلقين التصرف وقلنا بالأصح إن أجازتهم تنفيذ لقوله صلى الله عليه وسلم لا وصية لوارث إلا أن تجيز الورثة رواه البيهقي بإسناد قال الذهبي صالح وقياسا على الوصية لأجنبي بالزائد على الثلث. (مغنى المحتاج – كتاب الفرائض)
وإن أجاز بعض الورثة فيما تلزم الاجازة فيه ولم يجز بعضهم جاز في حصة من أجاز ما أجاز (الوصية للقرابة – كتاب الوصايا كتاب الأم )