ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக ஜம்இய்யாவின் வேண்டுகோள்

நவ 09, 2023

ACJU/FRL/2023/86-376                                                                                    

2023.11.09 (1445.04.24)

 

கண்ணியத்திற்குரிய கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு!

 

ஜுமுஆ தொழுகையின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும் அதனை விடுவதன் எச்சரிக்கைகளும் ஏனைய பர்ழான தொழுகைகளை விட வித்தியாசமானவையாகும். இத்தினத்தில் குளித்தல், மணம் பூசுதல், தன்னிடம் உள்ள சிறந்த ஆடையை அணிதல், நேர காலத்துடன் மஸ்ஜிதுக்குச் செல்லல், மௌனமாக இருந்து இமாமுடைய உபதேசத்தை செவிமடுத்தல் போன்ற சில ஸுன்னாக்களையும் இஸ்லாம் வழிக்காட்டியிருக்கின்றது.


ஜுமுஆவுடைய வணக்கத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம்கள் அனைவரும் வாராந்தம் ஓரிடத்தில் ஒன்று கூடி நிறைவேற்றும் ஒரு கடமையாகும். இத்தினத்தில் நிகழ்த்தப்படும் குத்பாக்கள் வினைத் திறன்மிக்கதாக அமைவதோடு கால சூழ்நிலைக்கு ஏற்ற விடயங்களையும் உள்ளடக்கிக் கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும்.


'தொழுகையை நீட்டி உரையைச் (குத்பாவை) சுருக்குவது ஒருவரது மார்க்க விளக்கத்திற்கு அடையாளமாகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் (குத்பாவை) சுருக்குங்கள்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அம்மார் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: 869)


எமது நாட்டில் வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருப்பதனால் மக்கள் அந்நேரத்தில் வேலைப்பளுக்களுக்கு மத்தியில் ஜுமுஆவின் கடமையை நிறைவேற்றிச் செல்கின்றனர். குறித்த நேரத்திற்குள் மக்கள் அவர்களது கடமையை முறையாக ஸுன்னாக்களைப் பேணி நிறைவேற்றிவிட்டு அவர்களது வேலைகளுக்குச் செல்லும் வகையில் குத்பாக்களையும் தொழுகையையும் அமைத்துக் கொள்வது கதீப்மார்களினதும் இமாம்களினதும் மஸ்ஜித் நிர்வாகிகளினதும் முக்கிய பொறுப்பாகும்.


இதனடிப்படையில் ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் எக்காலத்திலும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்யுமாறு கதீப்மார்களையும் இமாம்களையும் கேட்டுக் கொள்வதுடன் இது விடயத்தில் மஸ்ஜித் நிர்வாகம் கூடிய கவனம் செலுத்துமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

 

 

அஷ்-ஷைக் ஏ. ஜே. அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்ஷைக். எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.