ACJU/NGS/2023/007
2023.02.04 (1444.07.12)
எமது தாயகத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன, மத, குல, சாதி, வர்க்க பேதங்களின்றி எமது தாயக பூமியான இலங்கைத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த, அர்ப்பணித்த அத்தனை தலைவர்களையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
தாய்நாட்டை நேசிப்பதும் அதன்மீது பற்று வைப்பதும் ஒவ்வொரு தனி மனிதனதும் தார்மிகக் கடமையாகும். மேலும் அதன் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்வதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதும் தேசத்தின் ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும். இவை அடிப்படையில் மனித இயல்பு சார்ந்தது மாத்திரமன்றி மார்க்கம் வலியுறுத்தும் பெறுமானமாகவும் காணப்படுகின்றன.
அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஒவ்வொரு பிரஜையும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் கண்ணியமாகவும் கௌரவமாகவும் சகோதர வாஞ்சையுடனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனேயே எமது முன்னோர்கள் இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தமது உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றனர்.
75 வருடங்களுக்கு முன் அரசியல் ரீதியாக காலனித்துவ சக்திகளிடமிருந்து நாம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, நெருக்கடியானதொரு சூழலிலேயே இன்றும் நாம் வாழ்ந்து வருகிறோம்.
எமது நாட்டின் அண்மைக்கால அரசியல், பொருளாதார நெருக்கடிகள் எம்மனைவரது வாழ்வியலையும் வெகுவாகப் பாதித்துள்ள இக்கட்டான இந்நிலையில் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் வெகு சீக்கிரம் சீராக வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம்.
சுயநலம், காழ்ப்புணர்ச்சி, இனத்துவேசம் எதுவுமின்றி அனைவரும் ஒரு தாய் மக்களாய் ஒன்றுபட்டு வாழ்வதனூடாக எமது முன்னோர்கள் ஆதரவு வைத்த பரிபூரணமான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வோம். மேலும் அமைதியும் சமாதானமும் கோலோச்சுகின்ற முன்மாதிரிமிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதில் உண்மையான பங்காளிகளாக இணைந்திடுவோம்.
நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் அவரவர் உரிமைகளைப் பெற்று, சமாதானத்துடனும் சுபிட்சத்துடனும் வாழப் பிரார்த்திக்கிறோம்.
அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா