ACJU/NGS/2022/342
2022.09.21 (1444.02.24)
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' எனும் மூலச்சொல்லிலிருந்து பிறந்தது. அது அமைதி, சமாதானம், இணங்கிச் செல்லல், சாதுவாக நடந்து கொள்ளல், பாதுகாப்பு போன்ற பல்வேறு அர்த்தங்களைத் தருகின்றது.
அந்தவகையில் அமைதியை விரும்பி, நேசித்து, அதற்காகப் பிரார்த்தனை செய்தலே இஸ்லாம் என்பதன் பொருளாகும். இதனால்தான் அமைதியை ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் பறைசாற்றும் வகையில் இஸ்லாம் மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும் தொடர்புகளையும் வடிவமைக்கிறது.
மன அமைதி, குடும்ப வாழ்வில் அமைதி, சமூக அமைதி, சர்வதேச அமைதி என்றவாறு இஸ்லாம் அமைதியை அடித்தளமாகக் கொண்டது. இவ்வகையான அமைதிகளை பூமியில் நிலைநாட்டுவதே இஸ்லாத்தின் முதன்மையான குறிக்கோளாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
'இறைவனை நினைவுகூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன.' (ஸுறா ரஃத்: 28)
'நீங்கள் மன நிம்மதி பெறவேண்டும் என்பதற்காகவே உங்களிலிருந்தே அவன் உங்களுக்கான துணையைப் படைத்தான்.' (ஸுறா ரூம்;: 21)
'அவர்கள் சமாதானத்தின்பால் திரும்பிவிட்டால் நீங்களும் அதன் பக்கம் திரும்பிவிடுங்கள்.' (ஸுறா அன்பால்: 61)
அதேபோன்று இரு பிரிவினர் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்து வைக்குமாறு அல்குர்ஆன் கட்டளையிடுகிறது. (ஸுறா ஹுஜுராத்: 9)
இவ்வாறு சமாதானத்தையும் அமைதியையும் இஸ்லாம் தனது போதனைகளின் அடிநாதமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் இரு புயங்களிலுமுள்ள வானவர்களுக்கும் (மலக்குமார்கள்) தன்னோடு சேர்ந்து தொழுகையை நிறைவேற்றும் இருபக்கங்களிலுமுள்ள தனது சகோதரர்களுக்கும் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்கின்றான்.
நேரடி சந்திப்புகள், சந்தித்துப் பிரிகின்ற தருணங்கள், தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள், குறுஞ்செய்திகள் என மனிதர்களுடனான அத்தனை உறவாடல்களின் ஆரம்பத்திலும் இறுதியிலும் 'உங்கள் மீது அமைதியும் சாந்தியும் உண்டாகட்டும்' எனும் வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். இதுவே ஒரு முஸ்லிமின் வாழ்த்து முறையாகும். முகமன்களில் தலை சிறந்ததுமாகும்.
தாம் வாழும் சமூக சூழலில் அமைதியை நிலைநாட்டுவதும் அதனை பரவச் செய்வதும் மார்க்கத்தில் மிகச் சிறந்த செயல்களாகும். 'இஸ்லாத்தில் எது சிறந்தது எனக் கேட்கப்பட்ட ஒரு சமயத்தில், பசித்தோருக்கு உணவளிப்பதும் அறிமுகமானவர்களுக்கும் அறிமுகமாகாதவர்களுக்கும் ஸலாம் சொல்வதுமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முத்தபக்குன் அலைஹி)
அகிம்சை மற்றும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலகில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச அமைதி தினமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு, 'இனவாதத்தை ஒழிப்போம், அமைதியைக் கட்டியெழுப்புவோம்' எனும் கருப்பொருளில் இத்தினம் அனுஷ்டிக்கப்படவிருக்கிறது.
இப்ராஹீம் நபியவர்கள் தமது தாய் நாட்டுக்காக இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள். 'யா அல்லாஹ்! மக்காவாகிய இந்நகரத்தை அமைதியளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக.' (ஸுறா பகரா: 126) எமது தாய் நாட்டின் அமைதிக்காக நாமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
அமைதியான குடும்ப மற்றும் சமூக சூழலைக் கட்டியெழுப்புவதனூடாக நாட்டில் நிம்மதியான, மன மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்க்கையை சாத்தியப்படுத்துவோம். மோதல், யுத்தம், வன்முறை, பகைமை, காழ்ப்புணர்ச்சி என்பன இல்லாத அழகியதொரு தேசத்தை உருவாக்குவோம்.
நிறம், இனம், பால், மொழி, குலம், கோத்திரம், தேசம், நாடு, நகரம் என்ற வேறுபாடுகளைத் தாண்டி மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சமூக நீதியும் கோலோச்சுகின்ற வாழ்வியலை வேண்டி அல்லாஹ்விடம் இருகரம் ஏந்துவோம்.
அல்லாஹுத்தஆலா எம் அனைவரது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிம்மதியையும் நிலைத்திருக்கச் செய்வானாக.
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா