எழுத்தறிவு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

செப் 09, 2022

ACJU/NGS/2022/339

2022.09.09 (1444.02.12)


கல்வி, இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் பெற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரும் சொத்து. கல்வியை தேடிக் கற்றுக்கொள்வதை இஸ்லாம் ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் கடமையாக ஆக்கியுள்ளது. கல்வியைப் பெற்றுக் கொள்வதில் எழுத்து, பிரதான பங்கை வகிக்கிறது.


எழுத்தின் வழியாகவே நாம் வாசிக்கின்றோம். அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு எழுத்தும் வாசிப்புமே பிரதான வாயில்களாகும். உண்மையில் எழுத்து என்பது ஓர் அமானிதம். எழுத்தாளனாக இருப்பதென்பது ஒரு பொறுப்புணர்வு. எழுத்தாளன் தனது சிந்தனைகள், படைப்புகள், செயல்பாடுகள் வழியாகச் சமூகத்தை மேம்படுத்தும் மகத்தான பணியைச் செய்கிறான். அந்தவகையில் எழுத்தறிவு கொண்ட சமூகம், மானிட மேம்பாட்டுக்குத் தேவையான சகல துறைகளிலும் முன்னிலையில் நிற்கிறது.


கல்விச் சமூகமே சமூகத்தின் இருளை அகற்றி ஒளிபாய்ச்சுகிறது. இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபிய சமூக சூழலை அல்குர்ஆன் 'அய்யாமுல் ஜாஹிலிய்யா' என அழைக்கிறது. அறியாமையின் இருள் சூழ்ந்த காலம் என அது பொருள்கொள்ளப்படுகிறது.


கொலை, கொள்ளை, விபசாரம், சூதாட்டம், வீணான சண்டைகள் என பாவத்திலும் மடமையின் உச்சத்திலும் அவர்கள் இருந்தார்கள். அல்லாஹ் வஹியின் ஒளியைக் கொண்டு அச்சமூகத்துக்கு நேர் வழியைக் காட்டினான்.


அல்குர்ஆன் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறது. அல்குர்ஆனில் அறிவு (இல்ம்) எனும் சொற்பதத்துடன் சேர்த்து சிந்தனை, ஞானம், விளக்கம், ஆதாரம், தீட்சண்யம் ஆகிய கருத்துகளைத் தரும் சொற்களும் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.


அல்குர்ஆனில் முதன்முதலாக அருளப்பட்ட வசனங்கள் கல்வியையும் அறிவையும் பற்றிப் பேசுகின்றன.


'அனைத்தையும் படைத்த உமது இறைவனின் திருப்பெயரை கொண்டு ஓதுவீராக அல்லது வாசிப்பீராக. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.' (ஸுறா அல்அலக்: 1,4,5)


இவ்வசனத்தில் கல்வியை கற்றுக்கொள்வதற்கான அடிப்படை மூலமாக எழுத்தறிவு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.


மேலும், 'நூன். எழுதுகோலின் மீதும் அதனைக்கொண்டு எழுதுபவை மீதும் சத்தியமாக' (ஸுறா அல்கலம்: 1) என அல்லாஹ் அல்குர்ஆனில் சத்தியம் செய்கிறான். அதேபோன்று ஆராயுமாறும் சிந்திக்குமாறும் மனிதனைத் தூண்டுகின்ற வசனங்கள் அல்குர்ஆனில் பல இடங்களில் மீட்டப்பட்டுள்ளன.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'ஒருவர் அறிவைத்தேடி ஒரு பாதையில் சென்றால் அல்லாஹ் அவருக்கு சுவனம் செல்லும் பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)


மேலும் அறிவைத் தேடுபவர்களுக்காக மலக்குகள் தமது இறக்கைகளை விரிக்கின்றனர். கடல்வாழ் உயிரினங்கள் உட்பட வானம், பூமியிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றன என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)


இதனாலேயே இஸ்லாம், கல்வி கற்பதை வணக்கமாகக் (இபாதத்) கருதுகிறது.


அதேபோன்று கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது அதனை எழுத்து வடிவில் பதிவு செய்துகொள்ளுமாறு அல்குர்ஆன் எமக்கு வலியுறுத்தியிருக்கிறது. இது எழுத்தறிவு மற்றும் எழுத்து ரீதியான ஆவணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ர் யுத்தக் கைதிகளைக் கையாண்ட விதம், அறிவைப் பெற்றுக் கொள்வதன் அவசியத்தை துல்லியமாகக் காட்சிப்படுத்துகிறது. யுத்தகாலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் தங்களை விடுவித்துக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய பணத்திற்கு பதிலாக முஸ்லிம்களின் பத்து குழந்தைகளுக்கு கல்வி அறிவையூட்டி அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையை பெற்றுக் கொள்ளட்டும் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


உலகில் அனைவரும் எழுத்தறிவு பெறவேண்டும் என்பதை விழிப்புணர்வூட்டியும் மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் எழுத்தறிவின்மையை ஒழிக்கும் நோக்கிலும் ஐ.நா சபை செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.


எமது பிள்ளைகளுக்கு எழுத்தறிவை பெற்றுக் கொடுப்பதில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்டவேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் எழுத்தறிவுள்ள சிறந்ததொரு சமுதாயத்தை தோற்றுவிப்போம்.


தமது எழுத்தறிவைக்கொண்டு மார்க்கத்துக்கும் உலகுக்கும் பயனுள்ள ஆளுமைகளாக மிளிரப் பிரார்த்திக்கிறோம்.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.