அறம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

செப் 05, 2022

ACJU/NGS/2022/338

2022.09.05 (1444.02.08)


இஸ்லாம் பரிபூரணமான வாழ்க்கைத் திட்டமாகும். வணக்கவழிபாடுகளை வலியுறுத்தியிருப்பது போலவே மனிதர்களுடனான கடமைகளையும் அது பேசியிருக்கிறது. மனிதன் ஈருலகிலும் வெற்றிபெற வேண்டுமென்றால் பிறர் நலனில், சமூக நலப் பணிகளில் அதிக அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது.


ஏழைகள், நோயாளிகள், அநாதைகள், ஆதரவற்றவர்கள், கடனாளிகள் என மனிதர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். அதிகரித்த வாழ்க்கைச் செலவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அன்றாட அவசிய செலவுகளுக்குப் போதுமான வருமானமின்மை என்பன எல்லோரையும் இன்று ஏதோவொரு வகையில் நெருக்கடியான வாழ்க்கைச்சூழலுக்குத் தள்ளியிருக்கின்ற நிலையில் உணவு, போஷாக்கு, உடை, உறையுள், சுகாதாரம், கல்வி என அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட மிகவும் சிரமப்படுகின்ற மக்களை நாம் அரவணைப்பதும் ஆதரிப்பதும் மார்க்கக் கடமையாகும்.


அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். 'நீங்கள் நன்மையான விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளுங்கள்.' (மாஇதா: 02) மேலும் 'பிறருக்கு உதவியும் நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக பிறருக்கு நன்மை செய்கின்றவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.' (பகரா: 195)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல தருணங்களில் சமூக நலப் பணிகளை வலியுறுத்தியிருக்கிறார்கள். அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு எண்ணற்ற நன்மாராயங்களையும் நற்கூலிகளையும் சொல்லியிருக்கிறார்கள்.


'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய மனிதன் பிறருக்குப் பயனுள்ளவன் ஆவான்'. (ஜாமிஉஸ்ஸகீர்)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நோக்கிப் பின்வருமாறு நன்மாராயம் கூறினார்கள். 'நீங்கள் அதிகமதிகம் ஸலாத்தைப் பரப்புங்கள். உணவளியுங்கள். உறவினர்களை சேர்ந்து நடவுங்கள். மனிதர்கள் தூங்கிய வேளையில் எழுந்து தொழுங்கள். சாந்தியுடன் சுவனம் நுழைவீர்கள். (திர்மிதி)


மேலும், நானும் அநாதையின் காப்பாளரும் சுவனத்தில் இப்படி இருப்போம் எனக் கூறியவாறு தமது சுட்டுவிரலையும் நடுவிரலையும் சேர்த்துக் காண்பித்தார்கள். (ஸஹீஹுல் புஹாரி)


'கணவனை இழந்த விதவைப் பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார் அல்லது இரவில் நின்று வழிபட்டு பகல் முழுவதும் நோன்பு நோற்பவர் போன்றவராவார்.' (ஸஹீஹுல் புகாரி)


பாதையில் இடையூறு விளைவிக்கும் பொருளை அகற்றுவதைக்கூட ஸதகா என மார்க்கம் அடையாளப்படுத்தியிருப்பதும் பசித்தோருக்கு உணவளிப்பதானது, நாம் சுவனம் நுழைவதற்குக் காரணமாக அமைகிறது எனக் கூறியிருப்பதும் இஸ்லாம் எந்தளவு சமூக அறப்பணிகளை வலியுறுத்தியிருக்கிறது என்பதை இங்கு புரிந்துகொள்ள முடிகிறது.


அந்தவகையில் மனிதர்களின் துயர்துடைத்தல், தேவைகளை நிறைவேற்ற முன்வருதல், அதற்காக தமது நேரம், பணம், பொருள் மற்றும் உழைப்பை செலவழித்தல் என்பன எமக்கு ஈருலகிலும் நன்மையையும் மறுமை விமோசனத்தையும் பெற்றுத்தருகிறது.


தன்னார்வப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களிடம் மனிதநேயப் பண்பும் இரக்க குணமும் அன்பும் கருணையுமே அடிப்படையான பண்புகளாகும். குறித்த செயலை உளத்தூய்மையுடன், அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற முன்வருவதே முதன்மையான அம்சம். நல்லெண்ணமும் அதற்கான முயற்சியும் இருந்தால் அல்லாஹ் அதற்கான வழிகளை நிச்சயம் திறந்து தருவான்.


அல்குர்ஆன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து பின்வருமாறு கேட்கிறது. 'தீர்ப்பு நாளை மறுப்பவனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவன் அனாதையை விரட்டி விடுகிறான். மேலும் ஏழையின் நிலைகண்டு அவர்களுக்கு உணவளிக்கத் தூண்டுவதும் இல்லை.' (மாஊன்: 1-3)


வறியவர்களின் நிலை கண்டு துயர்துடைக்க முன்வராதவர்களை, அது பற்றிய எவ்வித உணர்வும் சிந்தையும் கவலையும் இல்லாத மனிதனை இஸ்லாம் குற்றவாளியாகக் கருதுகிறது. சமூக நலப்பணிகளில், அறம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அதற்காக எம்மால் இயலுமான பங்களிப்பை வழங்குவதும் மார்க்கத்தில் பெரிதும் வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.


தன்னார்வ மற்றும் பரோபகார நடவடிக்கைகள் மூலம் மனிதர்களுக்கும் தேவையுடையோருக்கும் உதவுவதற்காக உலகெங்கிலும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை விழிப்புணர்வூட்டி அணிதிரட்டுவதற்கும் குறித்த சமூக நலப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் நிறுவனங்களின் சேவையை மதித்து, உலகளவில் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் செப்டம்பர் 05 ஆம் திகதியை ஐ.நா சபை சர்வதேச தொண்டு தினமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது.


எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டுடிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். மேலும் பிறரின் கஷ்டத்தை நாம் சீராக்கினால் மறுமையில் எமக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ் நீக்குவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.


எனவே இவ்வனைத்துப் பாக்கியங்களுக்கும் நன்மாராயங்களுக்கும் நாமும் சொந்தக்காரர்களாக மாற முற்படவேண்டும். சிறிய விடயமாக இருந்தாலும் அதனை தொடர்ச்சியாக செய்வோம்.


மேலும் உலகெங்கிலும் தன்னார்வப் பணிகளில் ஈடுபடுகின்ற அத்தனை நலன்விரும்பிகள், நிறுவனங்கள், அமைப்புகளின் மகத்தான பணிகளை அல்லாஹ் அங்கீகரித்து அதற்கான நிரப்பமான கூலியை அவர்களுக்கு வழங்கவேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 07 செப்டம்பர் 2022 07:50

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.