ACJU/NGS/2022/326
2022.08.23 (1444.01.24)
மனித வரலாற்றுப் பயணத்தில் மோதல், யுத்தம், வன்முறை தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இதில் மூழ்கித் தவிக்கும் மானிடம், சமாதானம் எனும் இலட்சியத்தை அடைந்துகொள்வதற்கு முயல்கின்றபோதும் வன்முறைகளும் மோதல்களும் ஓயவில்லை.
பல்லின சமூகங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பானது. மத சகிப்புத் தன்மையுடன் பன்மைத்துவத்தை அங்கீகரித்துச் செல்வதே ஒற்றுமைக்கு வழிவகுக்கும். ஒருவரையொருவர் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்வதற்காகவே அல்லாஹ் மனிதர்களை பல்வேறுபட்ட சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் படைத்துள்ளதாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. (ஹுஜுராத்: 13) மேலும் ஒருவருக்கொருவர் பரிகாசம் செய்ய வேண்டாம் என்றும் ஒருவரை ஒருவர் இழிவாகக் கருதி குறை கூற வேண்டாம்... என்றும் அல்குர்ஆன் எமக்கு வழிகாட்டியிருக்கிறது. (ஹுஜுராத்: 11)
இனம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவரை கட்டாயப்படுத்துவது, அச்சுறுத்துவது, வன்முறைகளில் ஈடுபடுவது மதத்தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் தெளிவான அடையாளங்களாகும். இஸ்லாம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. அது இஸ்லாத்தின் நோக்கங்களுக்கும் இலக்குகளுக்கும் நேரடியாக முரண்படுகிறது.
கொள்கைச் சுதந்திரம் அனைத்து மனிதர்களுக்கும் உரியது. 'மார்க்கத்தில் நிர்ப்பந்தமோ, பலாத்காரமோ கிடையாது' என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. (பகரா: 256)
ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு சகோதரனாவான். அவன் பிறருக்கு அநியாயமிழைக்கவுமாட்டான். பிற முஸ்லிமால் அநியாயம் இழைக்கப்படவுமாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
அதேபோன்று '...நீதமாக நடந்துகொள்ளுமாறும் அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது...' (மாஇதா: 08) எனவும் அல்குர்ஆன் நீதியை எப்போதும் முதன்மைப்படுத்தியிருக்கிறது.
உண்மையில் இனத்தின் பேரில் தோற்றுவிக்கப்படும் அத்தனை வன்முறைகளும் மோதல்களும் அரசியல் சாயம் பூசப்பட்டவையாகும். அவ்வாறான சமூக மற்றும் தேச விரோத அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை நாம் கண்டிக்கின்றோம். அதனால் பாதிக்கப்பட்டர்கள், உயிர்நீத்தவர்கள், படுகாயமுற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம். ஏனெனில் அநியாயமிழைக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்;பது மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் பின்வருமாறு உபதேசம் செய்தார்கள். '...உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (ஹராம் - தடுக்கப்பட்டவையாகும்), (நூல்: புஹாரி)
மதம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான வன்முறைச் செயல்களைக் கண்டித்தும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும் அவர்களுக்கு உதவும் வகையிலும் ஆகஸ்ட் 22 இனை ஐ.நா சபை சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. அந்தவகையில் மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் நபர்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும் அவர்களின் வீடுகள், சொத்துகள், கலாச்சார மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்பவற்றுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களையும் அது கடுமையாகக் கண்டிக்கிறது.
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சகோதர இன மக்களோடு தொடர்ந்தும் சகவாழ்வைப் பேணிப்பாதுகாக்கவும் தேவையான அர்ப்பணிப்புகளுடன் செயற்பட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எப்போதும் தயாராக இருக்கிறது.
இதுபோன்ற துரதிஷ்டமான, கசப்பான, கறைபடிந்த நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாதிருக்கவும் நாட்டின் அமைதிக்காகவும் பிரார்த்திப்போம். பல்லின சமூகங்களோடு இந்நாட்டில் வாழும் நாம் பரஸ்ப புரிந்துணர்வோடும் நீதி, நியாயம், சமத்துவம் ஆகிய மார்க்கப் பெறுமானங்களை கடைப்பிடித்து ஒருவரையொருவர் மன்னித்து, மதசகிப்புத் தன்மையோடு வாழ்வதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் பங்களிப்புச் செய்வோம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா