தற்கால நெருக்கடி நிலைத் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக அறிக்கை

மே 12, 2022

ACJU/NGS/2022/112

2022.05.12

எரிபொருள் பற்றாக்குறை, அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் துண்டிப்பு போன்ற இன்னும் பல்வேறு பிரச்சினைகளால் தங்களது அன்றாட தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் நிர்ப்பந்திக்கப்பட்ட நமது நாட்டு மக்கள் சுமார் 1 ½ மாதங்களுக்கு மேலாக ஜனநாயக ரீதியில் பல்வேறு அமைதிப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.


இப்போராட்டங்கள் அனைத்தும் நாட்டில் வினைத்திறன் மிக்க அரசியல் மாற்றமொன்று வரவேண்டுமென்பதற்காக இன, மத, கட்சிப் பேதங்களின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்வது உலகறிந்த உண்மையாகும். இந்நிலையில் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் இவ்வமைதிப் போராட்டத்துக்கு இன ரீதியான முத்திரை குத்தி அதனை இனக்கலவரமாகத் திசைதிருப்ப பல்வேறு நாசகார சக்திகள் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருவது ஈண்டு குறிப்படத்தக்க மிக வேதனைக்குரிய விடயமாகும்.


முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து இந்நாட்டிலுள்ள பௌத்த தலைவர்களுக்கெதிராகவும், பௌத்த மதத்திற்கெதிராகவும் மேற்கொள்ளும் போராட்டமே இது என்ற பொய்யான செய்தியை சமூக வலைத்தளங்களில் சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதைக் காண முடிகிறது. எனவே, இது விடயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்வதுடன் மதத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், மற்றும் உரிய அதிகாரிகள் இது விடயத்தில் தகுந்த நடவடிக்கைகளை அவசரமாகவும் அவசியமாகவும் எடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.


அத்துடன் அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலையும் அதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும் வன்முறைகளையும் ஜம்இய்யா மிக வன்மையாகக் கண்டிப்பதோடு, நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுகோள்களையும் மதித்து அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கி பொருளாதார நெருக்கடியை நீக்குவதற்கான முயற்சியில் அனைத்து அரசியல் தலைமைகளும் ஈடுபடவேண்டுமென ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.


இந்நாட்டு மக்கள் அனைவரையும் நாட்டு சட்டத்தை மதித்து, பாதுகாப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து, அவசரமாக நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் மீள் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாக வேண்டிக் கொள்கின்றது.


இந் நெருக்கடியான நேரத்தில் மக்களை அமைதிபடுத்தி சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப மதத் தலைவர்களும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஜம்இய்யா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onவெள்ளிக்கிழமை, 13 மே 2022 08:30

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.