2022.05.13 ஆம் திகதி நிகழ்த்தப்படும் ஜுமுஆ உரை தொடர்பான வழிகாட்டல்

மே 12, 2022

ACJU/NGS/2022/113

2022.05.12 (1433.10.10)


அன்புடையீர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

தற்பொழுது நாட்டில் அவசரகாலச் சட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு ஊரடங்குச் சட்டம் ஆகியவை நடைமுறைபடுத்தப்பட்டு அமுலில் இருப்பதுடன், நம் நாடு பொருளாதார ரீதியாகவும் பாரிய நெருக்கடியான நிலைமைக்குட்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.


மக்கள் தமது கருத்துக்களை ஜனநாயக ரீதியில் முன்வைக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கு இஸ்லாம் கூறும் பிரகாரம் வழிகாட்டல்களை வழங்குவது உலமாக்களது தலையாய பொறுப்பாகும்.


ஆகவே, எதிர்வரக்கூடிய ஜூமுஆ உரையின் போது, பின்வரும் விடயங்களை அடிப்படையாக வைத்து சமூகத்துக்கு வழிகாட்டுமாறு அனைத்து கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.


• இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவதுடன், அவன் பக்கம் திரும்புதல் அவசியமாகும்.
'ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறொன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்' என்று (நபியே!) நீர் கூறும்;. முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (9:51)


• எமது சகல காரியங்களையும் அல்லாஹ்விடமே பாரஞ்சாட்ட வேண்டும்.
'எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்;'. (65:03)


• ஒவ்வொருவரும் எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ்வை அஞ்சி நடந்து அவனது கட்டளைகளை பின்பற்றி ஒழுகுவதுடன், அவன் தடுத்த விடயங்களிலிருந்து முற்றாக விலகி நடத்தல்.

 

• தௌவா, இஸ்திஃபார் செய்வதன் மூலம் பாவத்திலிருந்து மீளல்.
'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்;. நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்'. (71:10) '(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்'. (71:11)
'அன்றியும் அவன் உங்களுக்குப் பொருட்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்;. இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (71:12)


• அமைதி, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, பொறுமை போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலமும் தொழுகை மூலமும் உதவித் தேடுதல்.
:நம்பிக்கைக் கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவித் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்'. (2:153)

 

• பிறருக்கு ஏற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்களைக் கண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்வதுடன், எமது சகல காரியங்களிலும் நீதத்தையும் நிதானத்தையும் கடைப்பிடித்தல்.
'முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்'. (5:8)


'உங்களது சகோதரருக்கு நேர்ந்துள்ள சிரமத்தை கண்டுக் சந்தோஷத்தை வெளிப்படுத்தாதீர்' என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (சுனன் அத்திர்மிதி:2506) இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளக்கூடிய 'ஹஸன்' என்ற வகையைச் சேர்ந்த ஹதீஸாகும் என இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.


• வசதி படைத்தோர்கள், சமூக நலன்விரும்பிகள் நெருக்கடியான இந்நிலையில் சிரமத்திலுள்ளோர்;, பாதிக்கப்பட்டோர் என தேவையுடையவர்களை இனங்கண்டு உதவி செய்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ' யார் ஒரு சகோதரனின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரை விட்டும் அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகின்றான் (ஸஹீஹு முஸ்லிம்: 2699)


• ஜனநாயக ரீதியாக மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது பொதுச் சொத்துக்களுக்கோ தனிநபர்களது சொத்துக்களுக்கோ ஏதும் தீங்கு ஏற்படாதவாறு நடந்து கொள்ளல் வேண்டும்.

 

• சுமூக வலைத்தளங்களை மிக நிதானமாக கையாளுதல் வேண்டும். அவற்றைப் பயன்படுத்துபவர் தமக்குக் கிடைக்கப்பெறும் எந்தவொரு தகவலையும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாதவரை அவற்றை வெளியிடலாகாது. அவ்வாறே சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும்; வகையில் அவற்றைப் பயன்படுத்துதல், கருத்துக்கள் தெரிவிக்கும் போது ஏனையவர்களை தூற்றுதல், இழிவுபடுத்துதல் போன்றவற்றையும் முற்றாக தவிர்ந்துக் கொள்ளல் வேண்டும்.


இது தொடர்பில் அல்லாஹு தஆலா, 'முஃமின்களே! உங்களிடம் ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் (அதனை) தீர விசாரித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் அறியாமையின் காரணமாக ஒரு சமூகத்தை பாதிக்கும் முடிவுகளுக்கு வந்துவிடக் கூடும். அப்போது நீங்கள் செய்ததை நினைத்து கைசேதப்படுவீர்கள்.' (49:06) என்று குறிப்பிட்டுள்ளான்.


எனவே, மேற்கூறப்பட்ட வழிகாட்டல்களைப் பின்வற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனது பொருத்தத்தை அடைந்து கொள்வதுடன், நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி அமைதி, சுபீட்சம் ஏற்பட அல்லாஹு தஆலாவை நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹமத்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.