ஷவ்வால் மாதம்

மே 01, 2022

ஷவ்வால் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் பத்தாவது மாதமாகும். இது ரமழான் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும்.

 

ஷவ்வால் மாதம் பற்றி

ஷவ்வால் மாதம் என்பது 'அஷ்ஹுருல் ஹஜ்' (ஹஜ் மாதங்கள்) என பெயரிடப்பட்ட மூன்று மாதங்களில் முதன்மையானதாகும். ஹஜ்ஜின் செயல்கள் பொதுவாக துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பதின்மூன்று நாட்களில் செய்யப்படுகின்றன. இருப்பினும், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளிலிருந்து தொடங்கி துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் 13 ஆம் நாள் வரை ஹஜ்ஜின் காலமாக கணக்கெடுக்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் எந்த நேரத்திலும் ஹஜ்ஜின் சில செயல்கள் செய்யப்படலாம்.

ஹஜ்(ஜுக்கான காலம்) குறிப்பிட்ட சில மாதங்களாகும். அந்த மாதங்களில் ஒருவர் (தம்மீது) ஹஜ்ஜைக் கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின்போது தாம்பத்திய உறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, தர்க்கம் செய்வதோ கூடாது.
(அத்தியாயம்: அல்பகரஹ், வசனம்: 197)

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: 'ஷவ்வால், துல்கஃதஹ் மற்றும் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் (முந்திய) பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும்'
(நூல்: தப்ஸீர் இப்னு கதீர், பாகம்: 01)

 

ஷவ்வால் மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்:

01. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தமை. - ஹிஜ்ரி 01 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 03)

02. அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பிறப்பு இடம்பெற்றமை. இவர்களே ஹிஜ்ரத்தின் பின் முஹாஜிரீன்களின் முதல் குழந்தையாகும். - ஹிஜ்ரி 01 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 03)

3. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முல் முஃமினீன் உம்மு ஸலமஹ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தமை - ஹிஜ்ரி 04 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 04)

 

வணக்க வழிபாடுகள் பற்றி:

ஷவ்வால் மாதத்துக்கென பிரத்தியேகமான வணக்க வழிபாடுகள் காணப்படுகின்றன.


• ஸகாத்துல் பித்ர் வழங்குதல்:
ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத் தலைப்பிறைக் கண்டதும் அதைக் கொடுக்க வசதியுள்ளவர்கள் (தனக்கும் தனது பொறுப்பில் உள்ளவர்களின் பெருநாளுடைய தேவைக்கு மேலதிகமாக உள்ளவர்கள்) மீது கடமையான ஒரு தர்மமாகும்.
ஸகாத்துல் ஃபித்ர் வழங்குதல் தொடர்பான மேலதிகத் தெளிவுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலைப் பார்வையிடுக.

https://www.facebook.com/243971562468295/posts/1870904176441684/

 

• தக்பீர் சொல்லுதல்:
நோன்புப் பெருநாளன்று தக்பீர் சொல்வது ஸுன்னத்தாகும். அதன் நேரம் பெருநாள் இரவு சூரிய மறைவிலிருந்து இமாம் பெருநாள் தொழுகையை ஆரம்பிக்கும் வரையாகும்.
(நூல்: அல் மஜ்மூஃ, பாகம்: 05)

 

• நோன்புப் பெருநாள் இரவில் துஆக் கேட்டல்:
'ஜுமுஆவுடைய இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தின் முதலாம் இரவு மற்றும் ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு ஆகிய ஐந்து இரவுகளில் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றது' என்று கூறப்பட்டு வந்த விடயம் எமக்கு எட்டியுள்ளது என இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்உம்மு, பாகம்: 01)

 

• நோன்புப் பெருநாள் அனுஷ்டித்தல்:
ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் இருந்தன. அதில் அவர்கள் விளையாடிக் கொண்டாடுவார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இந்த இரண்டு நாட்களும் என்ன?' என்று கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடிக் கொண்டாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாளாகும்' என்று கூறினார்கள்.
(நூல்: ஸுனன் அபீ தாவூத் - 1134)

 

• நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பாவும்:
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாள் இன்னும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். பிறகு உரை நிகழ்த்துவார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ - 957)

 

• ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்றல்:
ஹழ்ரத் அபூஅய்யூப் அல்அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: யார் ரமழான் மாத நோன்பை நோற்றுளூ பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்பாரோ, காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போனறு ஆகிவிடுவார் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹு முஸ்லிம், 1164)

 

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்றல் தொடர்பான மேலதிகத் தெளிவுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாவைப் பார்வையிடுக.

(https://acju.lk/news-ta/acju-news-ta/item/2161-6-days-fasting-of-shawwal-tamil?highlight=WyJcdTBiYjdcdTBiYjVcdTBiY2RcdTBiYjVcdTBiYmVcdTBiYjJcdTBiY2QiXQ==)

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.