ACJU/NGS/2022/073
2022.03.31 (1443.08.27)
தற்போது எமது நாடு பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை முகம் கொடுத்து வருவதோடு, பொருட்களின் விலைவாசி அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கை பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் வியாபாரிகள் பெரும் பங்காற்றுகின்றனர். அல்லாஹு தஆலா அவர்களின் வியாபாரங்களில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்தனை செய்கின்றோம்.
வியாபாரிகள் எக்கட்டத்திலும் நேர்மை தவறிவிடக்கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நேர்மையான முறையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்துள்ளதோடு, அவ்வியாபாரிகள் நாளை மறுமை நாளில் நபிமார்களுடனும், உண்மையானவர்களுடனும், ஷஹீத்களுடனும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
வியாபாரிகள் இக்கட்டான இந்நிலையில் பொருட்களுக்கு கூடுதல் இலாபம் வைத்து மக்களுக்கு நெருக்கடி கொடுக்காது நடுநிலையான இலாபத்தை நிர்ணயித்து விற்க முயற்சிக்க வேண்டும். இது ஏழைகள், சிரமத்திலுள்ளோர்கள் அனைவருக்கும் செய்யும் தர்மமாக அமையும்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் வியாபாரிகளில் சிலர் மக்களுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் பொருட்களை அவர்களுக்கு விற்பனை செய்யாமல் விலை உயர்வுக்காக பதுக்கல் செய்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இச்செயலை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
பதுக்கல் செய்பவர்கள் பாவிகள் எனவும், சபிக்கப்பட்டவர்;கள் எனவும் ஹதீஸ்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் எப்பொருளையும் பதுக்கல் செய்வது ஹராமாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மார்க்க விளக்கத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு ACJU/FTW/2021/020-435 ஆம் இலக்க ஃபத்வாவில் வெளியிட்டுள்ளது. அதன் இணைப்பு: https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/2274-fatwa-on-monopoly-in-islam-tamil
ஆகவே, இக்கட்டான இச்சூழ்நிலையில் வியாபாரிகள் மக்களின் நலன்கருதி அவர்களுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் பதுக்கல் செய்யாது நியாய விலையில் விற்பனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா