நீர் வளத்தை பாதுகாப்போம் - இஸ்லாமிய கண்ணோட்டம்

மார் 22, 2022

ACJU/NGS/2022/058

2022.03.22 (1443.08.18)


நீர் வளத்தை பாதுகாப்பதன் தேவைப்பாட்டை அதிகம் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது. அல்குர்ஆன் இவ்வளத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. 'மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதனைப் பூமியில் தங்கும்படியும் செய்கின்றோம். அதனைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.'(அல்குர்ஆன் 23:18)

பூமியில் உள்ள மற்றொரு உயிரினத்திற்கு தண்ணீரை வழங்குவது இஸ்லாத்தில் ஒரு சிறந்த தொண்டு செயலாக கருதப்படுகிறது. இத்தகைய செயல் பெரிதும் நன்மை அளிப்பதோடு அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருங்கவும் செய்கிறது. 'ஒருவருக்கு தண்ணீர் கொடுப்பதே சதகாக்களில் சிறந்த சதகாவாகும்' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: நஸாஈ, இப்னுமாஜா, அபூதாவூத்)

நீர், எமது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியவசிய ஒரு அருள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் தினமும் எந்தளவு தண்ணீரை வீணாக்குகிறோம் என்பதைச் சிந்திக்கவோ அல்லது உணரவோ முனைவதில்லை. நாம் அனைவரும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் தேவையுடைவர்களை மறந்துவிடக்;கூடாது. அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் தேவைப்படுவதோடு அனைத்து உயிரினங்களும் அல்லாஹ்வின் இந்த அற்புதமான அருளில் தங்கி வாழ்கின்றன.

வுழூ (அங்கத் தூய்மை) செய்யும் போது தண்ணீரை அதிகம் வீணாக்குவதையும் ஓடும் நீர்நிலைகளில் சிறுநீர் கழிப்பதையும் இஸ்லாம் கண்டித்துள்ளது.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஸஃத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கத் தூய்மை (வுழூ) செய்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள். 'இது என்ன விரயம் (செய்கிறீரே)' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். அதற்கு ஸஃத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள், 'அங்கத் தூய்மை (வுழூ) செய்வதிலும் விரயம் ஏற்படுமா' என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம், ஓடும் நதியின் கரையில் நீர் இருந்(து வுழூச் செய்)தாலும் மூன்று தடவைக்கு அதிகமாகும் போது விரயம் ஏற்படவே செய்யும்' என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா)

வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை என அல்குர்ஆன் எச்சரித்துள்ளது. '(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், வீண்விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.' (அல்குர்ஆன் 7:31)

உலக நீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி நினைவு கூறப்படுகிறது. இத்தினம் நீரின் அத்தியவசியத் தன்மையை ஞாபகப்படுத்துவதோடு தற்போது தண்ணீர் கிடைக்காமல் வாழும் பல பில்லியன் மக்களின் நிலை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

ஒருவருக்கு தண்ணீர் கொடுக்கும் எளிய செயல் இஸ்லாத்தில் பெரிதும் நன்மையளிக்கிறது. எனவே, ஒருவருக்கு நீர் பெற்றுக்கொள்வதற்கான வசதியை செய்து கொடுப்பது ஒருவரது மரணத்திற்குப் பின்பும் பயனளிக்கும் நற்செயலாக (சதகா ஜாரியாவாக) இஸ்லாம் கருதுகின்றது. தண்ணீர் மற்றும் நீர்பாசன திட்டங்களுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமும் அத்தகைய கொடையை எமக்கு மேற்கொள்ள முடியும். இந்த நீராகாரத்தை ஒரு பறவை குடித்தாலும், கொடுப்பவர் அதற்கான பலனை பெற்றுக்கொள்வார். எனவே, நீரை வீண்விரயம் செய்யாமல், அளவோடு பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு அதனை கொடை கொடுக்கும் அருள்பெற்ற கூட்டத்தில் அல்லாஹ் நம்மனைவரையும் சேர்த்தருள்வானாக!

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 23 மார்ச் 2022 03:38

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.