ரமழானும் ஆன்மீகமும்

மார் 19, 2022

ACJU/NGS/2022/056
2022.03.19 (1443.08.15)

 

அல்லாஹ்வின் அருளால் நாம் ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இது அருள்மிகு ரமழான் மாதத்திற்குத் தயாராகும் காலப் பகுதியாகும்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹுதஆலா சங்கையான அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வொரு அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும் சதகாவினதும் மாதமாகும்.

ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக வழிகாட்டல்கள்:

1. ரமழான் மாதத்தின் அனைத்து நோன்புகளையும் பேணுதலுடன் நோற்றல். 'ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றவரின் முந்தைய பாவம் மன்னிக்கப்படுகின்றது' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுறைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : ஸஹீஹுல் புகாரி)

2. பர்ழான, சுன்னத்தான இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்தல். குறிப்பாக, சமூக வலைத்தளங்களிலும் வேறு அனாவசியமான விடயங்களிலும் நேரத்தை வீணடிப்பதை முற்றாக தவிர்த்தல்.

3. தறாவீஹ் தொழுகை மற்றும் இரவு நேர வணக்கங்களில் அதிகமான அளவு ஈடுபடுதல். 'ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இரவு வணக்கத்தில் ஈடுபடுகின்றவரின் முந்தைய பாவம் மன்னிக்கப்படுகின்றது' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுறைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : ஸஹீஹுல் புகாரி)


4. அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடனான இறுக்கமான தொடர்பை ஏற்படுத்தல். மேலும் அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் போதனைகளை எமது வாழ்வில் எடுத்து நடப்பதும், பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுவதும் அல்குர்ஆன் மீதான எமது கடமைகள் ஆகும். ஓவ்வொரு தனி நபரும் அதிகமதிகம் அல்குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு 'ஜுஸ்உ'வையாவது ஓத முயற்சித்தல்.

5. தன்னைத் தான் சுயவிசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பமாக இந்த ரமழானை ஆக்கிக் கொள்ளுதல்.

6. ரமழானின் இறுதி 10 தினங்களில் இஃதிகாப் எனும் அமல் முக்கியத்துவம் பெறுவதால் இந்த அமலை ஊர் மக்கள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகள் உரிய முறைகளைப் பேணி செய்து கொடுத்தல்.

7. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிமிக்க சூழல் நீங்கி, நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பவும், அவர்கள் ஆரோக்கியத்துடனும் சுகாதாரத்துடனும் சுபீட்சமாக வாழவும், எமது தேவைகள் நிறைவேறவும் பிரார்த்தித்தல். நோன்பு திறக்கும் நேரம், ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரங்களை அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளல்.

இவ்வான்மீக வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோமாக!

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் ரமழான் மாதத்தை அடைந்து அவனது றஹ்மத்தையும், மஃபிரத்தையும், நரக விடுதலை என்ற பாக்கியத்தையும் பெற்ற கூட்டத்தில் எம்மனைவரையும் ஆக்கியருள்வானாக.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
ஃபத்வாக் குழுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: நோன்பு, ஸகாத் மற்றும் ஸகாத்துல் ஃபித்ர் போன்ற விடயங்கள் தொடர்பான மார்க்கத் தெளிவுகளை பெற விரும்புபவர்கள் ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவின் 0117-490420 என்ற துரித இலக்கத்தை (வார நாட்களில் காலை 10.00 முதல் மாலை 04.00 வரை) தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

Last modified onசனிக்கிழமை, 19 மார்ச் 2022 12:49

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.