ACJU/NGS/2022/053
2022.03.08 (1443.08.04)
சர்வதேச மகளிர் தினமாகிய இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இச்செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது. இஸ்லாம் ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் அவர்களது கடமைகளையும் உரிமைகளையும் அழகாக வரையறுத்துள்ளதோடு, அவர்களுக்கான உரிய அந்தஸ்தையும் வழங்கியுள்ளது.
இஸ்லாத்தில் பெண்கள் தொடர்பிலான கண்ணோட்டம் மிகவும் தெளிவானதாகும். இஸ்லாம் பெண்களின் அந்தஸ்து மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பில் குறிப்பிட்டிருப்பது மாத்திரமன்றி இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலங்களிலிருந்து சமூக, பொருளாதார, விடயங்களில் அவர்கள் பங்களிப்புச் செய்வதற்கான உரிமையும் சுதந்திரமும் உத்தரவாதப்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டும் வந்துள்ளது.
'ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.' (அல்குர்ஆன் 4:124) என ஆண் பெண் சமநீதி தொடர்பில் அல்குர்ஆன் பேசுகின்றது.
'கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும்.' (பைஹகி) என்ற நபிமொழியின் படி இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய கடமைகளில் ஒன்றாக கல்வி கற்பதை ஆக்கியிருக்கின்றது. மார்க்க விளக்கங்களை அறிந்து கற்க ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (புகாரி)
தனக்கு பொருத்தமில்லாத கணவனை ஏற்கமறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது போன்றவற்றிலும் இஸ்லாம் பெண்களுக்கு உரிமை வழங்கியுள்ளது. தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வதற்கும் அவர்கள் உரிமை பெறுகிறார்கள். இதுபோன்ற பல உரிமைகளை இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
பெண்ணுக்குரிய சொத்துரிமை பற்றி இஸ்லாம் குறிப்பிடுகையில் '(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வாறே) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும். (அல்குர்ஆன் 4:7) என அல்குர்ஆன் கூறுகின்றது.
'தம் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். உங்களில் நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவராக இருக்கின்றேன்' (திர்மிதி) என்ற நபிமொழயின் படி பெண்களுடன் மிருதுவாகவும், நலினமாகவும் சிறந்த முறையிலும் நடக்கக் கூடிய நல்லடியார்கள் கூட்டத்தில் அல்லாஹ் நம்மனைவரையும் சேர்த்தருள்புரிவானாக!
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா