09.11.2020 (22.03.1442)
கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உரிய தரப்பினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏனைய அமைப்புகளோடு சேர்ந்து முன்வைப்பதில் முன்னின்று உழைத்ததை அனைவரும் அறிவர். அந்தவகையில் எமது வேண்டுகோள் கவனத்திற் கொள்ளப்பட்டு, தகனமும் அடக்கமும் என்ற, இருவிதமான அனுமதிகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் பின்னர், மீண்டும் அது தகனம் மட்டும் என்ற அடிப்படையில் அரச வர்த்தமானியில் சட்டபூர்வமாக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, துறைசார்ந்தோர், சிவில் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முஸ்லிம் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் தொடர்ந்து உச்சகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இது வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:
1. 24.03.2020 ஜனாதிபதி, பிரதமர், கெரோனா பாதுகாப்புப் பிரிவு ஆகிய தரப்பினருக்கு உலக சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலை அமுல் படுத்த வேண்டி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
2. 31.03.2020 ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், கொரோனா பாதுகாப்புப் பிரிவின் தலைமையகம் மற்றும் டாக்டர் அனில் ஜயசிங்க முதலானோருக்கு மற்றுமொரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
3. 01.04.2020 அன்று தகனம் தொடர்பிலான அதிருப்தியைத் தெரிவித்து ஓர் ஊடக அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.
4. 10.05.2020 சுகாதார அமைச்சருக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டி ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.
5. 05.06.2020 மரணித்தவர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஓர் அறிக்கை விடப்பட்டது.
6. 22.06.2020 ஜனஸா அடக்கம், தகனம் தொடர்பிலான மார்க்கத் தெளிவு கொடுக்கப்பட்டது.
7. 05.07.2020 சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சேர்ந்து, இவ்விவகாரமாக சிவில் அமைப்பினர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பல தரப்பினரும் தம்மாலான முயற்சிகளில் இன்று வரை தொடர்ந்தேர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். எமது இந்த முயற்சிகளை அல்லாஹ் வீணாக்கப்போவதில்லை நாம் உறுதியாக நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள், பாராளுமன்றம் செல்ல முன்பிருந்தே இதற்கான பூரண முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளதைப் போன்று இன்றும் அமைச்சரவையில் பிரதான இடம் வகிக்கும் நீதி அமைச்சர் என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் இந்த விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து ஈடுபாடு காண்பித்து வருகிறார் என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
சுகாதார துறைசார்ந்தோர்கள் சிலரின் அச்சம் அல்லது சந்தேகமே அடக்கம் செய்யும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள தடையாக இருந்து வருகின்றது என்பதையும் இந்நிலைப்பாடு தொடர்பில் தனக்கு அதிருப்தி இருக்கின்றது என்பதையும் 2020.11.08 ஆந் திகதி கொழும்பு கொல்லுபிட்டி ஜும்ஆப்பள்ளியில் நடைபெற்ற விஸேட வைபவத்தின் போது, மிகத் தெளிவாக கருத்து தெரிவித்தார் என்பது யாவரும் அறிந்ததே.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) வழிகாட்டலுக்கமைய மையவாடிகள், மண்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதனால், இன்று (2020.11.09) குப்பியாவத்த மையவாடியில் மண்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; அது தொடர்பான அறிக்கையை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா