ACJU/MED/2020/010
01.08.2020 / 10.12.1441
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
கொவிட் 19 இன் தாக்கம் உலகளாவிய ரீதியில் முழுமையாக நீங்காத ஒரு சூழலில் இன்று சனிக்கிழமை தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வருடம் குறிப்பிட்ட அளவு மக்களே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டிருப்பதால் எமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிருந்தும் ஹஜ்ஜுக்காக செல்ல நாட்டமிருந்த பலருக்கும் அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயமாக அதற்காக நாட்டம் வைத்த அனைவருக்கும் மற்றும் ஏனையோருக்கும் அல்லாஹுதஆலா பூரண நன்மைகளைத் தந்தருள வேண்டுமென இத்தினத்தில் பிராத்தனை செய்கின்றோம்.
இன்றைய நாளை சிறந்த முறையில் கழிப்பதுடன் இன்று செய்ய வேண்டிய சுன்னத்தான அமல்களான தக்பீர் சொல்லுதல், குளித்தல், புத்தாடை அணிதல் அல்லது தம்மிடம் காணப்படும் சிறந்த ஆடையொன்றை அணிதல், வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளல், உணவருந்தாமல் தொழுகைக்கு சமூகமளித்தல், பெருநாள் தொழுகையை நிறைவேற்றுதல், வசதியுள்ளவர்கள் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல் போன்ற அமல்களில் ஈடுபட வேண்டும்.
இத்திருநாளில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவு படுத்தாமல் இருக்க முடியாது. அக்குடும்பத்தின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். இம்முன்மாதிரிகளை நாம் ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப வாழ்கையில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
இறைவனின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தை பறைசாட்டும் உழ்ஹிய்யாவுடைய அமலை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்ட வகையிலும் நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன்வர வேண்டும்.
அதே நேரம் தியாகத் திருநாள் கற்றுத் தரும் தியாக மனப்பாங்கை எம்மில் வளர்த்தல், மார்க்க விடயங்களில் பேணுதலாக இருத்தல், ஏனையோருக்கு உதவிகள் செய்தல், அனைவருடனும் அன்பாக பழகுதல், சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளல் போன்ற நல்ல பண்புகளையும் எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டு மட்டத்திலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணைபுரிய வேண்டுமெனவும் உலகளாவிய முஸ்லிம்கள் பொதுவாகவும், இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்! ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா