மேற்படி பெயருடைய நான் தங்களிடம் வேண்டிக்கொள்வது எனது ஊரில் உள்ள பள்ளிவாயில்களில் தொழுகை நடாத்தும் பொழுது ஸப்புகளுக்கிடையில் தூண்கள் குறுக்கிடுவதால் சப்புகள் சீரற்ற நிலையிலும் பூரணமற்றும் காணப்படுகின்றது.

இதனை சில உலமாக்கள் கூடும் என்றும் இன்னும் சிலர்கள் கூடாதென்றும் கூறுவதனால் பொதுமக்களாகிய எங்களுக்கு மார்க்கத்தினை பூரணமாக நடைமுறைப்படுத்த சிரமமாக உள்ளது.

எனவே இதற்கான பூரண விளக்கம் தருமாறு பணிவாய்க் கேட்டுக்கொள்கின்றேன்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தூண்கள் குறுக்கிடும் சப்புகளில் மஃமூம்கள் நின்று தொழும் விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை உள்ளது. பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து மஸ்ஜிதில் இடநெருக்கடி இல்லாத பொழுது அல்லது தொழுகைக்காக வரக்கூடியவர்களின் தொகை குறைவாக இருக்கும் நிலையில், தூண்கள் குறுக்கிடும் ஸப்புகளில் மஃமூம்கள் நின்று தொழுவது மக்ரூஹ் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

முஆவியா இப்னு குர்ரா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் நாம் தூண்களுக்கு மத்தியில் ஸப்புகள் அமைப்பதை விட்டும் தடுக்கப்பட்டோம். மேலும், அதை விட்டும் நாம் விரட்டப்பட்டோம்.

அப்துல் ஹமீத் இப்னு மஹ்மூத் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாம் ஓர் அமீருக்குப்பின்னால் தொழுதோம். அப்போது மக்கள் எம்மை நெறுக்கிய காரணமாக நாம் தூண்களுக்கு மத்தியில் தொழுதோம். இப்படியாக நாம் அவ்விடத்தில் தொழுத போது அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நாம் இதை விட்டும் தவிர்ப்பவர்களாக இருந்தோம்' என்று கூறினார்கள்.

அதேவேளை மற்றும் சில அறிஞர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவுக்குள் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுத ஹதீஸை ஆதாரமாக வைத்து தூண்கள் குறுக்கிடும் ஸப்புகளிகல் மஃமூம்கள் நின்று தொழுவது கூடுமென கூறியுள்ளனர்.  

நாம் இவ்விரு கருத்துக்களையும் ஆராய்ந்த வகையில், பின்வரும் ஆலோசனைகளை வழங்குகின்றோம்.

  1. தூண்கள் குறுக்கிடாதவாறு சப்புகளை அமைத்துக்கொள்வது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
  2. புதிதாக மஸ்ஜித்கள் கட்டப்படும் பொழுது முடியுமான அளவு ஸப்புகளில் தூண்கள் குறுக்கிடாதவாறு அமைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
  3. அவ்வாறு அமைக்கும் பொழுது இரு சப்புகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளி சுமார் மூன்று முழங்களிலிருந்து நான்கு முழங்களை அடையாத அளவு இருப்பது அவசியமாகும். அதையும் விட இடைவெளியை அதிகமாக்கினால் ஜமாஅத்தின் நன்மை கிடைக்க மாட்டாது.
  4. மஸ்ஜித் விசாலமற்றதாக இருக்கும் பொழுது அல்லது மஸ்ஜிதுக்கு சமுகமளிப்போரின் தொகை அதிகமாகவும் இருக்கும் சந்தர்ப்பங்களில் சப்புகளுக்கு இடையில் உள்ள தூண்களுக்கு மத்தியில் தொழுவதற்கும் அனுமதியுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு