வஹ்தத்துல் வுஜுத் கொள்கையுடைய கணவனுடன் குடும்ப வாழ்க்கை நடாத்துவது சம்பந்தமான மார்க்கத் தெளிவு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வஹ்தத்துல் வுஜுத் எல்லாம் அவனே எனும் கொள்கை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 2015.05.20 ஆம் திகதி நடத்தப்பட்ட மனாகிபுஸ்ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்புக்கள்) எனும் மாநாட்டில் பின்வரும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.   

எல்லாம் அவனே எனும் வஹ்தத்துல் வுஜுத் சிந்தனையும் அல்லாஹுதஆலா தனது படைப்பினங்களில் இறங்கினான் என்ற ஹுலூல் கொள்கையும், அவன் அவற்றில் ஒன்றித்து விட்டான் என்ற இத்திஹாத் சிந்தனையும், தூய இஸ்லாமிய சிந்தனைக்கு முற்றிலும் முரணான குப்ரை ஏற்படுத்தும் சிந்தனைகளாகும் என்பதையும், அல்லாஹு தஆலா ஒருவனாகவும், வணக்கத்துக்குத் தகுதியான ஒரே இறைவனாகவும், சகல படைப்பினங்களினதும் படைப்பாளனாகவும் இருப்பது போலவே அவன் வேறானவனாகவும், அவனால் படைக்கப்பட்ட சிருஷ்டிகள் வேறானவையாகவும் இருப்பதை நம்புவது அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தின் அகீதாவின் ஓர் அடிப்படைக் கொள்கையாகும் என்பதையும் இம்மாநாட்டில் மிகத் தெளிவாக வலியுறுத்தப்பட்டது.

எனவே, ஒரு நபர் தனது சுயவிருப்பத்தில் எல்லாம் அவனே எனும் வஹ்தத்துல் வுஜுத் கொள்கையை பின்பற்றுபவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கிவிடுவார் என்பது மேற்குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானத்திலிருந்து தெளிவாகின்றது.

இவ்வாறான கொள்கையுடையவர் ஒரு முஸ்லிமான பெண்ணை திருமணம்  செய்யவோ அல்லது தான் வலீயாக இருந்து திருமணம் செய்து வைக்கவோ ஷரீஅத்தில் அனுமதி கிடையாது. அவ்வாறு நடை பெற்றால் அத்திருமணம் செல்லுபடியாகாது. மேலும், திருமணமான ஒருவர் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முன், அவர் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள விடயம் உறுதியாகிவிட்டால், அவரது திருமணம் பஸ்கு முறையில் தானகவே ரத்தாகிவிடும்.

இருப்பினும், அவர் தௌபா செய்து முஸ்லிமாகி மீண்டும் அந்த திருமண வாழ்வில் இணைய விரும்பினால், புதிதாக திருமண ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமாகும்.

அதே வேளை அவர் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டதன் பின்னர் அவர் இக்கொள்கையை ஏற்றுள்ள விடயம் உறுதியாகி விட்டால், அத்தினத்திலுருந்து அவரது மனைவி இத்தா அனுஷ்டிக்க வேண்டும். எனினும் இத்தாவின் காலம் பூர்த்தியாகுவதற்கு முன்னர் அவர் தௌபா செய்து முஸ்லிமாகி விட்டால் அவ்விருவரும் மீண்டும் திருமண வாழ்வைத் தொடரலாம். அதற்காக புதிதாக திருமண ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

அதே நேரம் இத்தாவுடைய காலம் முடிவடைந்ததன் பின்னர் அவர் தௌபா செய்து இஸ்லாத்திற்கு மீண்டால்; அப்பொழுது புதிய திருமண ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் பல ஸஹாபிப் பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டும் அவர்களது கணவன்மார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாததனால் அவர்களை நபியவர்கள் இல்லற வாழ்வை தொடர அனுமதிக்கவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள்மார்களில் ஒருவரான ஸைனப் றழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அவர்களது கணவர் அபுல் ஆஸ் பின் ரபீஃ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் இருவரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரித்து வைத்தார்கள். மேலும், அபுல் ஆஸ் பின் ரபீஃ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுடன் இருவரையும் சேர்த்து வைத்தார்கள். இவ்விடயம் திர்மிதி, அபூதாவுத், இப்னு மாஜா மற்றும் அஹ்மத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இது விடயமாக 'மின்ஹாஜுத் தாலிபீன்'  எனும் ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய நூலில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது.

பொருள் : 'கணவன் மனைவி இருவரும் அல்லது அவர்களிள் ஒருவர் உடலுறவு கொள்ள முன் இஸ்லாத்தை விட்டும் நீங்கிவிட்டால் உடனடியாகவே திருமண உறவு முறிந்து விடும். உடலுறவு கொண்டதன் பின் இஸ்லாத்தை விட்டும் நீங்கி, இத்தாவுடைய காலத்தில் இஸ்லாம் அவர்களை ஒன்று சேர்த்தால் (அதாவது அவர்கள் முஸ்லிமாகி விட்டால்) அவர்களது திருமணம் தொடரும். அவ்வாறு இல்லாவிட்டால் இஸ்லாத்தைவிட்டும் நீங்கியதிலிருந்தே அவர்களது திருமண உறவு முறிந்து விட்டதாக கணிக்கப்படும்.'

பொதுவாக இஸ்லாத்தை விட்டும் நீக்கக் கூடிய கொள்கையில், தௌபா செய்யாது உறுதியாக தொடர்ந்து இருக்கும் கணவன்மார்களது சட்டமும், அவர்களது மனைவிமார்களது சட்டமும் மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படையிலாகும்.

என்றாலும், வஹ்தத்துல் வுஜுத் போன்ற இஸ்லாத்துக்கு முரணான கொள்கைகளைப் பின்பற்றுவபர்களுக்கு, அவர்களது கொள்கை இஸ்லாத்துக்கு முரணானது என்ற விடயத்தை அன்பான முறையில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறி அவர்களை இஸ்லாத்தின் பக்கம் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளைச் செய்வதும் அவசியமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு