மேற்படி எமது கல்லூரியில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த 22 முஸ்லிம் ஆண் மாணவர் ஆசிரியர்கள் எமது பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

எமது ஜுமுஆக் கடமையை நிறைவேற்றுவதற்கு வெளியே சென்றுவர அனுமதி இல்லாததன் காரணமாக உமது வளாகத்திலுள்ள பள்ளிவாசலுக்கு மௌலவிமார் வருகை தந்து ஜுமுஆப் பிரசங்கம் நடை பெறுகின்றது.

எனினும், ஜுமுஆத் தொழுகையை நிறைவேற்றுவதில் எமது மாணவ ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பாக சிக்கல் நிலைமை ஏற்படுகின்றது.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் புதிய மாணவ ஆசிரியர்களின் வருகையின் காரணமாக இவ்வெண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம்.

மேற்படி நிலைமைகளில் எமக்கான மார்க்கத் தீர்ப்பை ஜம்இய்யத்துல் உலமாவிடம் எதிர்பாத்;து நிற்கின்றோம்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜுமுஆ மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும். அதை நிறைவேற்றுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றில் முக்கிய ஒரு நிபந்தனை நிரந்தரக் குடியிருப்பவர்களில் சிலரும் அங்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறு சமுகம் தருவோர்; எத்தனைபேர் இருக்க வேண்டும் என்ற விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன.

ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் 'நிரந்தரக்குடியிருப்பாளர்களில் பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதுவே இமாம் அஹ்மதின் நிலைப்பாடுமாகும்.

நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருந்த போதிலும், அவ்வெண்ணிக்ககையினர்; நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருப்பது அவசியம் என்ற விடயத்தில் பெரும்பாலான அறிஞர்கள் கருத்தொற்றுமைப்படுகின்றனர்.இதற்கான காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வெளியே பிரயாணத்தில் பல நாட்கள் தங்கியபோதிலும்; ஜுமுஆ நடாத்தவில்லை என்பதாகும்.

தனிப்பட்ட தேவைகளுக்காக ஓர் ஊரில் தற்காலிகமாக தங்கியிருப்போர் ஜுமுஆவுக்கு சமுகமளிப்பது அவசியமாக இருந்தபோதிலும் அவர்கள் நிரந்தரக் குடிகளின் எண்ணிக்கையில் உள்ளடங்கமாட்டார்கள். இந்தவகையில் தற்காலிகமாக தங்கியிருப்போர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜுமுஆ நடத்துவது கூடாது. அவ்வாறு நடாத்தினால் அந்த ஜுமுஆ செல்லுபடியற்றதாகவே கணிக்கப்படும்.

எனவே, தற்காலிகமாகக் தங்கியிருப்பவர்கள் தமக்கு அருகாமையில் ஜுமுஆ நடக்கக் கூடிய இடங்கள் இருந்தால் அங்கு சென்று ஜுமுஆவை நிறைவேற்றுவது அவசியமாகும். அவ்வாறான இடங்கள் இல்லையென்றால் அவர்கள் ளுஹ்ர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு