மாற்றுத்திறணாளிகளின் கல்லூரிக்கும் மற்றும் அரபுக் கல்லூரிக்கும் 'பீஸபீலில்லாஹ்' பங்கிலிருந்து ஸக்காத் கொடுக்கலாமா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸகாத் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அதைப் பெறத் தகுதியுடையவர்கள்  பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

''(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் உத்தியோகத்தர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்'. (09:60)

அல்லாஹு தஆலா குறிப்பிட்டுள்ள எட்டு கூட்டத்தினரில் 'பீஸபீலில்லாஹ்' எனும் கூட்டத்தாரும் அடங்குவர்.

'பீஸபீலில்லாஹ்' என்ற பதம் பொதுவான கருத்துடையதாகும். அதன் நேரடியான பொருள் 'அல்லாஹ்வின் பாதையில்' என்பதாகும். மஸ்ஜிதுக்கு தொழுவதற்காக செல்லும் செயலிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் போராடுவது மற்றும் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவது போன்ற செயல்கள் வரையுள்ள நன்மையை நாடி நிறைவேற்றப்படும் அனைத்துச் செயல்களுக்கும் 'பீஸபீலில்லாஹ்' என்று கூறப்படும். 

மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்பிடப்பட்டிருக்கும் 'பீஸபீலில்லாஹ்'  எனும் கூட்டத்தினர் யார் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

'வசதிபடைத்தவர்கள் ஸகாத் எடுப்பது கூடாது. இருப்பினும் ஐந்து நபர்களைத் தவிர.  அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அதாஉ இப்னு யஸார் றழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத் : 1635)

இமாம் ஷாபிஈ, இமாம்  மாலிக், இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுமுல்லாஹ் உள்ளிட்;ட பெரும் பாலான மார்க்க அறிஞர்கள் இந்த ஹதீஸ் மற்றும் அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் 'பீஸபீலில்லாஹ்' எனும் வார்த்தை அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை என்பவைகளை ஆதாரமாக வைத்து 'பீஸபீலில்லாஹ்' எனும் கூட்டத்தினர், ஊதியம் பெறாது அல்லாஹ்வின் பாதையில் போராடும் பலர்கள் என கூறுகின்றனர். ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களின் சரியான கருத்தும் இதுவாகும். மேலும் தற்கால பத்வா அமைப்புகளில் மிக முக்கிய அமைப்பான 'மஜ்மஉல் பிக்ஹ் அல்-இஸ்லாமி' எனும் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியமும் இக்கருத்தையே கூறுகின்றது.

என்றாலும், தற்கால சில அறிஞர்கள் 'பீஸபீலில்லாஹ்' என்பது அல்லாஹ்வின் பாதையில் போராடுவோரை மாத்திரம் அன்றி பொதுவாக இஸ்லாத்தைப் பாதுகாக்கவும், அதை நிலை நிறுத்தவும் துணையாக இருக்கின்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிக் கொள்ளும் எனவும், அவ்வடிப்படையில், இஸ்லாத்தைப் பாதுகாக்கவும், அதை நிலைநிறுத்தவும் துணையாக இருக்கின்ற  நபர்கள், அமைப்புக்கள் போன்ற அனைவருக்கும் 'பீஸபீலில்லாஹ்' உடைய பங்கிலிருந்து ஸகாத் கொடுக்கலாம் எனவும் கூறுகின்றனர். இக்கூற்று பெரும்பாலான அறிஞர்களின் கருத்துக்கு மாற்றமானதாக இருப்பதுடன் பலவீனமான கருத்தாகவும் இருக்கின்றது.

இது விடயத்தில் பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடே ஆதாரபூர்வமான சரியான கருத்தாகும்.

அந்தவகையில், இந்தக் கூட்டத்தினர் இலங்கையில் இல்லை என்பதால் நீங்கள் உங்களது கேள்வியில் குறிப்பிட்ட  அரபுக் கல்லூரிக்கும், மாற்றுத்திறணாளிகள் கற்கும் பாடசாலைக்கும் 'பீஸபீலில்லாஹ்' என்ற பங்கிலிருந்து ஸகாத் கொடுக்க முடியாது.

என்றாலும், மேற்குறித்த கல்லூரிகளில் கற்கும் மாணவர்கள் பரம ஏழை, ஏழை, கடனாளி போன்ற ஸகாத் பெறத் தகுதியான கூட்டத்தினரில் உள்ளடங்குவார்களாக இருந்தால், அக்கூட்டத்தினரின் பங்குகளிலிருந்து ஸக்காத்தைக் கொடுக்கலாம்.

இம்மாணவர்களின் பெற்றோர்கள் ஸக்காத் பெறத் தகுதியில்லாத, வசதியானவர்களாக இருந்தால்;, அவர்களுக்கு செலவழிப்பது அப்பெற்றோர்களின் கடமையாகும். இந்நிலையில் அப்பிள்ளைகளுக்கு ஸகாத் பங்கிலிருந்து கொடுக்க முடியாது என்பதையும் கவனத்தில்கொள்ளப்படல் வேண்டும்.

மேலும், ஸக்காத் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதால், நிர்வாகத்தினர் மாணவர்களது வகீல்களாக இருந்து, அவர்களுக்குரிய ஸக்காத்தை ஏற்று அவர்களிடமே ஒப்படைத்தல் வேண்டும். மாணவர்கள் மாதாந்தக் கட்டணமாகவோ அல்லது வேறு முறையிலோ நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யலாம். அதே நேரம் ஸதகா, வக்ப், மேலும் ஹிபத் போன்றவைகளிலிருந்து இவர்களுக்குத் தாராளமாக உதவிகள் செய்யலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு