மேற்படி விடயம் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் 2014.02.20 ஆந் தேதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.  

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒரே ஊரில் ஒன்றை விட அதிகமான ஜுமுஆக்களை ஆரம்பிக்கும் காரணிகள் பற்றி 2013.06.26,27 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பத்வா குழு கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் இறுதியில் கீழ்க் காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

  • ஷரீஆவில் அனுமதிக்கப்பட்ட தக்க காரணங்களுக்காகவே ஒரே ஊரில் இன்னும் ஒரு ஜுமுஆவை ஆரம்பிக்கலாம்.  
  • ஷரீஆவில் இன்னும் ஒரு ஜுமுஆவை ஆரம்பிப்பதற்கான தக்க காரணங்களாவன:

 

  1. ஊர் மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று சேர்வது கடினம் எனும் அளவு தூரம்.
  2. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர முடியாத அளவு இடநெருக்கடி.
  3. தனி ஊராக இருத்தல்.

எனவே, மேற்குறிப்பிடப்பட்ட காரணங்கள் அல்லாத வேறு காரணங்களுக்காக ஒரே ஊரில் இன்னும் ஒரு ஜுமுஆவை ஆரம்பிப்பதற்கு மக்களுக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட குழுவுக்கோ எவ்வித அனுமதியும் இல்லை.

  • பஜ்ருத் தொழுகையில் குனூத் ஓதல் போன்ற ஷரீஆவின் உட்பிரிவுகளில் காணப்படும் கருத்து முரண்பாடுகளுக்காக எவ்விதத்திலும் ஓர் ஊரில் இன்னுமொரு ஜுமுஆவை ஆரம்பிக்கலாகாது. அத்துடன், மஸ்ஜித் நிர்வாகிகள் தமது ஊரிலுள்ள மாற்றுக் கருத்துள்ளவர்களையும் மார்க்க வரையறைக்கு உட்பட்ட வகையில் அரவணைத்துக் கருமமாற்ற முயற்சி செய்தல் வேண்டும். மேலும், மாற்றுக் கருத்துடையவர்கள்

இன்னும் ஒரு ஜுமுஆ ஆரம்பிப்பதற்கு மஸ்ஜித் நிர்வாகிகள் தமது செயற்பாடுகளால் வழிகோலாமல் இருப்பதும் முக்கியமானதாகும்.

மார்க்க விடயத்தில் முரண்பாடுகள் ஏற்படும் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு வெளியிட்டுள்ள ஒற்றுமைப் பிரகடணத்தை மையமாக வைத்துச் செயற்படுதல் வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.