திகாரிய ஊர்மனையில் அமைந்துள்ள எமது சலாஹிய்யா அரபுக்கல்லூரி ஆரம்ப காலத்தில் வாடகைக்; கட்டிடமொன்றில் இயங்கி வந்தது. பின்னர் ஒரு தனவந்தர் இக்கல்லூரிக்காக ஒரு காணியை அன்பளிப்புச் செய்தார். அக்காணியில் கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து கல்லூரியை நடாத்திவந்தோம். கட்டிட வேலைகள் பூர்த்தியாக்கப்படாத நிலையிலேயே மத்ரஸா நடாத்தப்பட்டு வந்தது. ஒரு சில அசௌகரிகங்களினால் குறிப்பாக ஆறொன்றிற்குப் பக்கத்தில் கல்லூரி இருப்பதனால் கடுமையான மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கல்லூரியின் வகுப்பறை அமைந்துள்ள கட்டிடம் முற்றாக நீரில் மூழ்குவதனாலும் கல்லூரி பாதைக்கு அண்மையாக இருப்பதனாலும், கட்டிடம் அமைந்துள்ள காணி உறுதியான நிலமாக இல்லாததால் கட்டிடம் ஒரு பக்கமாக எதிர்காலத்தில் சாய்ந்து விடலாம் என பொறியியலாளர்கள் குறிப்பிட்டதனாலும் இதற்குரிய மாற்று வழிகளை நாம் யோசித்துக்கொண்டிருந்தோம்.

இக்காலகட்டத்தில் அல்லாஹ்வின் உதவியால் நமதூரைச் சேர்ந்த ஒரு தனவந்தர் எமது நிலையை அறிந்து கல்லூரிக்குப் பொருத்தமான ஒரு காணியை ஒரு விசாலமான வீட்டுடன் எமக்காக வாங்கித் தந்தார். அல்ஹம்துலில்லாஹ் தற்போது இக்காணியில் நாம் எமது மத்ரஸாவை சிறப்பாக நடாத்தி வருகின்றோம்.

நாம் ஏற்கனவே மத்ரஸாவை நடாத்தி வந்த பழைய இடத்தை கல்லூரிக்கு வருமானம் தரக்கூடிய ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தலாம் என ஆலோசித்துள்ளோம். எமது இந்த முடிவு சரியா பிழையா என இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் ஒரு சிறந்த முடிவை தருமாறு வேண்டுகிறோம்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

குறித்த காணி குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வக்பு செய்யப்பட்டிருந்தால் வக்பு செய்தவர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ அந்நோக்கத்திற்காகவே அக்காணியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

அவ்வாறு வக்பு செய்யப்படாமல் அக்காணி மத்ரஸாவிற்காக அன்பளிப்பு செய்யப்பட்டிருப்பின் வக்புடைய சட்டத்திற்கு உட்படமாட்டாது.

குறிப்பிட்ட அன்பளிப்பு செய்யப்பட்ட காணியை, மத்ரஸா நடாத்துவதற்குப் பயன்படுத்த முடியாது என்றிருப்பின், மத்ரஸாவிற்கு வருமானம் வரும் வகையில் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்ட விதத்தில் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை.

என்றாலும், குறிப்பிட்ட காணியை அன்பளிப்புச் செய்தவர் மத்ரஸா நடைபெற வேண்டும் எனும் நன்நோக்கில் அன்பளிப்புச் செய்திருப்பதால் பகுதி நேர மத்ரஸா அல்லது மக்தப், குர்ஆன் மத்ரஸா போன்ற தேவைகளுக்காக பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு