ஜுமுஆ நேரத்தில் அடிக்கடி பொருட்கள் களவு போவதால் பொருட்களைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் சிலரை நியமிக்க அனுமதியுண்டா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜுமுஆடைய குத்பா மற்றும் தொழுகை முஸ்லிமான, பருவ வயதை அடைந்த, பிரயாணி அல்லாத, ஜுமுஆவை விடுவதற்கு உரிய காரணங்கள் அற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு ஆணின் மீதும் கடமையாகும்.

பொதுவாக தகுந்த காரணங்களின்றி ஜுமுஆவை விடுவது ஹராமாகும். அவ்வாறு விடுபவர்களுக்கு மார்க்கத்தில் எச்சரிக்கை வந்துள்ளது.

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிம்பர் மீது நின்றபடி பின்வருமாறு கூறினார்கள். 'மக்கள் ஜுமுஆக்களை விடுவதிலிருந்து உறுதியாகத் தவிர்ந்து இருக்கட்டும். அவ்வாறு தவிர்ந்து இருக்கவில்லை என்றால் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் நல்லதைக் கேட்காதவாறு முத்திரை பதித்துவிடுவான். பின்னர் அவர்கள் மறதியாளர்களாக ஆகிவிடுவார்கள்' இந்த ஹதீஸை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் அபூ ஹுரைராஹ் ரழியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் அறிவிக்கின்றார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம் : 865)

மற்றுமொரு ஹதீஸில் பின்வருமாறு வந்துள்ளது.

ஒருவர் தொடர்ந்;து மூன்று ஜுமுஆக்களைப் பொடுபோக்காக விட்டுவிடுவாராயின் அவருடைய இதயத்தில் அல்லாஹ் முத்திரை பதித்து விடுவான்' என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூ தாவூத்) 

'இமாம் அல் முனாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்' என்ற வாசகத்திற்கு 'உள்ளங்களில் அல்லாஹ் முத்திரை பதித்து மென்மைத் தன்மையை அகற்றி, அதில் அறியாமை, கடினத் தன்மை என்பவற்றைக் கொண்டு நிரப்பி விடுவான். அல்லது அந்த உள்ளங்களை நயவஞ்சகர்களுடைய உள்ளங்களைப் போன்று ஆக்கிவிடுவான் என்று விளக்கம் கூறுகின்றார்கள்.

எனவே, தகுந்த காரணங்களின்றி ஒருவர் ஜுமுஆவை விடுவதற்கு எவ்வகையிலும் அனுமதியில்லை. அவ்வாறான காரணங்கள் ஏதுமிருப்பின் ஜுமுஆவை விட்டுவிட்டு ழுஹ்ர் தொழுவதற்கு அனுமதியுள்ளது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'யார் அதான் சப்தத்தைக் கேட்டும் தகுந்த காரணம் இன்றி தொழுகையை விட்டுவிடுவாரோ, அவர் தனித்துத் தொழுத தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்'. தகுந்த காரணம் என்னவென்று நபித்தோழர்கள் கேட்ட பொழுது 'நோய் அல்லது பயம்' என்று கூறினார்கள். (ஆதாரம் நூல் : அபூ தாவூத், அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு) 

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாக வைத்து, மார்க்க அறிஞர்கள் இன்னும் சில காரணங்களை குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் தமது பொருள் அழிந்துவிடும் அல்லது சூறையாடப்பட்டுவிடும் என்ற பயமும் ஒரு காரணமாகும்.

உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம் உங்களது மர்க்கஸின் பொருட்களின் பாதுகாப்புக்காக ஜுமுஆவுடைய நேரத்தில் சிலரை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்தால், அவ்வாறு நியமிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டு. அவர்களுக்கு ஜுமுஆ கடமையாகாது. அவர்கள் ழுஹ்ர் தொழுதால் போதுமாகும். ஜமாஅத் தொழுகையை விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட காரணங்களே ஜுமுஆத் தொழுகையை விடுவதற்கான காரணங்களாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

என்றாலும், குறிப்பிட்ட நபர்களையே தொடர்ந்து நியமிக்காமல், வாரத்திற்கு வாரம் நபர்களை மாற்றி நியமிப்பதால் ஒருவாரம் ஜுமுஆ தவறியவருக்கு அடுத்த வாரம் ஜுமுஆ கிடைக்க வாய்ப்பு உருவாகும். மேலும், பிரயாணிகள் போன்ற ஜுமுஆக் கடமையாகாதவர்கள் யாரும் இருப்பின் அவர்களை இதற்காக முற்படுத்துவது மிகவும் ஏற்றமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்  

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு