எமது ஊரில் நடைபெறுகின்ற சில வியாபாரங்கள் குறைந்த மூலதனத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடலை வியாபாரம், வாழைப்பழ வியாபாரம், ஐஸ்பழ வியாபாரம், கிழங்கு டேஸ்ட் வியாபாரம், வடை, டொபி, மிக்ஸர், நடை வியாபாரம், குடிபான வியாபாரம் போன்ற வியாபாரங்களைக் குறிப்பிடலாம்.

இவற்றின் முதலீடு 85 கிராம் தங்கத்தின் நாணயப் பெறுமதியிலும் குறைவாகவிருந்த போதிலும் இவ்வியாபாரிகள் பெறுகின்ற வருடாந்த இலாபம் அல்லது வருமானம் 85 கிராம் தங்கத்தின் நாணயப் பெறுமதியிலும் பார்க்க கூடுதலான தொகையை பெறுகின்றமையை அறியக்கூடியதாக இருக்கின்றது. இவர்களிடமிருந்து ஸகாத் அறவிடலாமா?  

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவர் வியாபாரத்தை ஆரம்பித்து ஒரு வருடம் (சந்திர வருடம்) பூர்த்தியாகும் நேரத்தில், அவரது வியாபராப் பொருட்கள், பணம் மற்றும் வரவேண்டிய வியாபாரக் கடன்கள் போன்றவை ஸகாத் கடமையாகும் ஆகக் குறைந்த அளவை (நிஸாபை) அடைந்திருந்தால் அவர் ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அவர் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொழுது ஸகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) விடக் குறைவாக இருந்தாலும் சரி. கடலை வியாபாரம், வாழைப்பழ வியாபாரம், போன்ற சிறு வியாபாரங்களிலும் மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் இருந்தாலே அன்றி ஸகாத் கடமையாகாது. 

கிடைக்கப்பெறும் வருமானம் செலவழிந்து விட்டால், அதை ஸக்காத் கணக்குப் பார்க்கும் பொழுது சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) 85 கிராம் தங்கம் அல்லது 595 கிராம் வெள்ளியின் பெருமதியாகும். இலங்கை நாணயத்தில் 09.04.2015 ஆந் திகதியின் பிரகாரம் ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) தங்கத்தின் பெருமதியில் ரூபாய் 481,312.50 உம், வெள்ளியின் பெருமதியில் ரூபாய் 56,525.00 உம் ஆகும். தங்கம் வெள்ளியின் விலை நாளுக்கு நான் வித்தியாசப்டுவதனால் ஸகாத் கடமையாகுவதின் ஆகக் குறைந்த நிலையில் வித்தியாசம் ஏற்படலாம். ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்கும் பொழுது தனக்கு ஸகாத் கடமையாகியுள்ளதா என்பதை அறிந்து கொள்ள குறிப்பிட்ட தினத்தின் தங்கம் வெள்ளியின் விலையை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏழைகளின் நலவுகளைக் கவனித்து வெள்ளியுடைய நிசாபை அடிப்படையாக வைத்து ஸக்காத்தை நிறைவேற்றிக்கொள்வது சிறந்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.