முஅத்தின் அதிகாரிகள் சம்மேளனத்திற்கு ஸகாத் வழங்குவது சம்பந்தமாக பத்வாக் கோரி 2014.12.24 ஆந் திகதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

இடங்களில் சிறந்த இடமாகிய அல்லாஹ்வின் மாளிகையில், அதான் கூறும் முஅத்தின்கள் மற்றும் ஏனைய சேவைகளில் ஈடுபடும் ஊளியர்கள், அதிகாரிகள் போன்ற அனைவரினதும் சேவைகள் அளப்பரியது. குறிப்பாக, முஅத்தின்களது சிறப்புகள் விடயத்தில் பல ஹதீஸ்கள் வந்துள்ளன.

'ஒரு முஅத்தினுடைய சப்தம் செல்லும் அளவு தூரம் அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது, மேலும், அவருக்குக் காய்ந்த, ஈரமான ஒவ்வொரு வஸ்துக்களும் பாவமன்னிப்புத் தேடுகின்றது'  என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறியதாக அபூ ஹுரைராஹ் (றழி) அவர்கள் கூறியுள்ள ஹதீஸ் இப்னு மாஜாஹ் எனும் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களது சேவைகளுக்கான போதியளவு சம்பளத்தை வழங்குவதற்கான ஒழுங்குகளைக் குறித்த நிர்வாகம்; செய்தல் வேண்டும்.

ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:                              

'(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் ஸகாத் பணியிலீடுபடும் இஸ்லாமிய அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்'. (09:60)

முஅத்தின் அதிகாரிகளுக்கு ஸக்காத்தில் குறிப்பாக ஒரு பங்கு குறிப்பிடப்படவில்லை. அவர்கள் மேற்கூறப்பட்ட, அல்லாஹுத் தஆலா அல்-குர்ஆனில் கூறும், ஸக்காத் பெறத் தகுதியான பிரிவினர்களில் பரம ஏழை, ஏழை, கடனில் மூழ்கியவர்கள் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஸக்காத் கொடுக்கலாம்.

ஸகாத் எடுக்கத் தகுதியான முஅத்தின் அதிகாரிகளை இனம் கண்டு நேரடியாக ஸகாத்தை கொடுப்பது சிறந்தது. முஅத்தின் அதிகாரிகளின் நலன்களில் ஈடுபடும் சங்கங்கள், சம்மேளனங்கள் போன்ற அமைப்புக்களுக்கும் அவர்கள் முறையாக ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்குக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் ஒப்படைக்கலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.