ஏறாவூர் ஆற்றங்கரை முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகள் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஆனால் இப்புனரமைப்பு விடயங்களில் பின்வரும் அம்சங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் மார்க்க ரீதியான சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

  1. இப்பள்ளியில், இருந்து தொழுவதற்கென்றும் சாய்ந்திருந்து குர்ஆன் ஓதுவதற்கென்றும் ஸப்புகளில் நீண்ட கட்டுக்கள் சுமார் 2.5 அடி உயரத்தில் கட்டப்பட்டு அதற்கு குஸன் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஸப்புகளின் ஒழுங்கு சீர்குலையும் அமைப்பு தோன்றுவதுடன் பள்ளிவாசலின் அமைப்பும் ஒழுங்கற்றுக் காணப்படுகின்றது.
  2. அத்துடன் உட்பள்ளியில் நடக்கும் குத்பாவை வெளிப் பள்ளியிலுள்ளவர்கள் பார்ப்பதற்காக வு.ஏ யும் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்விரு செயற்பாடுகளும் உலமாக்கள் புத்திஜீவிகள் பொதுமக்கள் ஆகியோர் மத்தியில் பல்வேறு விமர்சனங்களையும் மார்க்க ரீதியான ஐயப்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன. எனவே இவ்விரு வியடங்களையும் தாங்கள் நேரடியாகப் பார்வையிட்டு தெளிவான பத்வாவை விரைவாக தெரியப்படுத்துமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

பள்ளிவாசலில் தூண்களுக்கு மத்தியில் சிறிய அளவில் கட்டுக்கள் கட்டப்பட்டிருப்பது சம்பந்தமாக

குறிப்பிட்ட பள்ளிவாசலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுவில் சிலர் 22.11.2015 அன்று நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதுவிடயமாக 16.12.2015 அன்று நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்தில் அக்குழுவினர் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பிட்ட பள்ளிவாசலில் தூண்களுக்கு மத்தியில் சிறிய அளவிலான கட்டுக்கள் கட்டப்பட்டிருப்பது பள்ளிவாசலில் நடைபெறும் அமல்களுக்குத் தடையாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதனால் இக்கட்டுக்கள் ஷரீஆவிற்கு முரணாக இருப்பதாகத் தெரியவில்லை.

குத்பாப் பேருரையை இமாம் அல்லாத மாடியில் அகலத் திரையில் காண்பித்தல்.

குத்பாப் பேருரையை கதீப் உரையாற்றும் மாடியல்லாத ஏனைய மாடிகளில் அகலத்திரை மூலம் உரையைக் காண்பிப்பது பற்றி தற்கால மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

குத்பாப் பேருரையை செவிமடுப்பதற்காக மஸ்ஜிதிற்கு சமுகமளிக்கும் சிறார்கள் உட்பட அனைவர்களது கவனத்தையும் உரையின் பக்கம் திருப்புவதற்காக இவ்வாறு அகலத் திரையில் குத்பா உரை நிகழ்த்துவதைக் காண்பிப்பதனால் ஜுமுஆவின் பயன் இன்னும் அதிகரிக்கும் என்பதால் இவ்வாறு காட்சிப்படுத்தவது ஆகும் என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

என்றாலும், பல அறிஞர்கள் பின்வரும் பல காரணங்களை வைத்து அவ்வாறு அகலத் திரையில் காண்பிப்பது கூடாது என்று கூறுகின்றனர்.

  1. ஜுமுஆவின் தொழுகையையும், பேருரையையும் அல்லாஹுத் தஆலா அல்-குர்ஆனில் 'திக்ருல்லாஹ்' அல்லாஹ்வை ஞாபகம் செய்தல் என்று குறிப்பிட்டுள்ளான்.

'يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ' (الجمعة-9)

'ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, 'அல்லாஹ்வை ஞாபகம் செய்ய' (மஸ்ஜிதுக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்' (அல்-ஜுமுஆ – 09)

எனவே, காலாகாலம் நாம் குத்பாப் பிரசங்கத்திற்குக் கொடுத்து வந்த கௌரவமும், மகிமையும் குறைந்துவிடலாம் அல்லது இழந்து விடலாம்.

  1. திரையில் ஜுமுஆ நடைபெறும் பொழுது ஹதீஸில் வலியுறுத்தப்படட்டுள்ள இமாமுக்கு அருகாமையில் உட்காருவதை விட்டுவிட்டு மக்கள் அத்திரைக்கு அருகாமையில் உட்கார ஆரம்பித்து விடலாம்.
  2. திரையில் காண்பிப்பதற்கு இருள் அவசியம் என்பனால் மஸ்ஜிதை இருளாக்குவதற்கும், தொழில் நுட்;பக் கோளாறுகள் ஏற்படும் பொழுது அதை சரிசெய்வதற்கும் மனிதர்களின் நடமாட்டம் இடம்பெறும். இதனால் ஜுமுஆவிற்குத் தேவையான அமைதி நிலை இல்லாமற் போகும். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'யார் ஜுமுஆவின் பொழுது கற்களைத் தொடுகிறாரோ அவரது ஜுமுஆ வீணாகிவிடும்' என்று கூறியுள்ளார்கள். (நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் எண் : 869 )

எனவே, இது போன்ற இன்னும் பல பின் விளைவுகளை வைத்து மஸ்ஜிதில் ஜுமுஆப் பேருரைகளைத் திரையில் காண்பிப்பது கூடாது என்று கூறும் மார்க்க அறிஞர்களின் கருத்தை ஏற்றமானதாகவும், பேணுதல் உள்ளதாகவும்; கருதுகிறோம். மேற்கண்ட விடயங்களை கவனத்திற் கொண்டே தீர்ப்புகள் பெறப்படவேண்டும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூறிக்கொள்ள விரும்புகிறது.

சிறார்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவர்களது தந்தையர்கள், பாதுகாவளர்களுடன் ஒன்றாக உட்கார வைப்பது போன்ற வேறு உத்திகளைக் கையாளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு