நான் குழந்தையாக இருக்கும் போது எனது தாயிடம் பால் அருந்துவது மிகவும் குறைவு. நான் பாலை உறிஞ்சுக் குடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம் எனவும் எனது சின்னம்மா எனக்கு மிகவும் கஷ்டப்பட்டே பால் ஊட்டியுள்ளார் எனவும் எனது தாய் கூறினார்.

ஒரு முறை எனது தாயிடம் பால் அருந்தாமல் இருப்பதால் எனது சின்னம்மா (தாயின் சகோதரி) எனக்கு பால் ஊட்ட முயற்சித்துள்ளார். அதன் போது பால் அருந்த மறுத்ததாகவும் அப்போது எனது சின்னம்மா கூறியுள்ளார் 'என்ன இந்தப் பிள்ளை பாலை உறிஞ்சுதே இல்லை' என்று கூறியதாக எனது தாய் கூறினார். இதன்போது ஒன்று அல்லது இரண்டு துளிகள் பால் சென்றிருக்கலாம் என எனது தாய் கூறுகின்றார். இதன்போது பசிக்காகவோ வயிறு நிரம்பும் அளவுக்கோ பால் அருந்தவில்லை என எனது தாய் கூறினார்.

இன்னுமொரு முறை எனது தாய் குளியளறையில் இருக்கும் போது எனது சின்னம்மா பால் ஊட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அதைப்பற்றி எனது தாய்க்கு ஏதும் தெரியாது என கூறுகின்றார்.

இது தொடர்பாக எனது சின்னம்மா கூறுவதாவது:

அவர் எனக்கு இருமுறை பால் ஊட்டியதாகவும் ஒருமுறை எனது தாயின் முன்னிலையிலும் மற்றையது எனது தாய் குளியளறையில் இருக்கும் போதும் பால் ஊட்டியதாகவும் கூறியுள்ளார்.

 

நான் எனது தாயிடம் பால் அருந்துவது குறைவு என்பதால் பால் ஊட்ட முயற்சித்ததாகவும் கூறினார். மேலும் பசிக்காவா? அல்லது வயிறு நிரம்பும் அளவுக்கு பால் ஊட்டப்பட்டதா? என்பது அவரின் நினைவில் இல்லை என்றும் கூறினார். எனது தாய் குளியளறையில் இருக்கும் போது நான் அழுததாகவும் அதன்போது பால் ஊட்டியதாகவும் கூறினார். மற்றைய முறை எனது தாயின் முன்னிலையிலேயே பால் ஊட்டியதாகவும் கூறினார்.

மார்பகத்தில் இருந்து பிள்ளை வாய் எடுத்ததா? அல்லது அவர் வாயை எடுத்துவிட்டாரா? என்பதும் அவரின் நினைவில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

நானும் எனது சின்னம்மாவின் மகனும் திருமணம் முடிக்க விரும்பியுள்ளோம். ஆனால் இப் பால்குடி உறவு முறை தொடர்பாக எழுந்துள்ள இப்பிரச்சினையை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு இல்லையெனில் திறையின்றி பழகலாமா? 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

இரண்டு வயதை அடையாத ஒரு குழந்தை தாய் அல்லாத ஒரு பெண்ணிடம் ஐந்து தடவைகள் பால் குடித்துவிட்டால் அக்குழந்தைக்கு அந்தப் பெண் பால் குடித்தாயாக மாறுவதுடன் அப்பெண்ணின் கணவன் பால் குடித் தகப்பனாகவும் அவ்விருவரின் பிள்ளைகள் பால் குடிச் சகோதரர்களாகவும் மாறிவிடுவாரகள்.

ஒரு தடவை குழந்தை பால் குடித்துவிட்டது என்பதை குழந்தை பால் குடித்துவிட்டு மார்பிலிருந்து தானாக, வாயை எடுத்துவிட்டால் அது ஒரு தடவையாக கணிக்கப்படும். இவ்வாறு ஐந்து தடவைகள் குழந்தை பால் குடித்துவிட்டால் மேற்கூறப்பட்ட அனைவரும், பால் குடி உறவுடையோராக மாறுவதுடன், அவர்களைத் திருமணம் முடிப்பதும் ஹராமாகிவிடும்.

இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் போன்ற சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்தாலும், அப்பால் குடி உறவுகள் மஹ்ரமாகுவதுடன், அவர்களைத் திருமனம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.

உங்கள் கேள்வியிலிருந்து விளங்கப்படுவதானது நீங்கள் உங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இரு தடவைகள் பால் குடித்துள்ளீர்கள் என்பதாகும்.

இதன் அடிப்படையில், இங்கு நீங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இருந்து இரு தடவைகள் பால் குடித்த விடயம் உறுதியாக இருந்தாலும், ஐந்து தடவைகள் பால் குடிக்கவில்லை என்பதனால் நீங்கள் பால் குடித்த உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனை  நீங்கள் திருமணம் முடிப்பது ஹராமாகாது.

என்றாலும், நாம் மேற்கூறியது போன்று சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்து விட்டாலும் பால் குடி உறவு ஏற்பட்டு, திருமணம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளதனால், உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனைத் திருமணம் முடிக்காமல் இருப்பது மிகவும் பேணுதலாகும்.  மேலும், இதனால் பின்னால் ஏற்படும் பல அசௌகரியங்களை விட்டும் தவிர்ந்துகொள்ள முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.