மஸ்ஜித்களில் பெண்களுக்கு ஜுமுஆ நடாத்துதல்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் தோழர்கள் மீதும் உண்டாவதாக

பொதுவாக, பெண்கள் பர்ளான தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், மஸ்ஜிதுக்கு செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. அவர்கள் மஸ்ஜிதுக்கு செல்வதற்கு, அவர்களுக்கு பொறுப்பாக உள்ள ஆண்களிடம் அனுமதி வேண்டினால் அவர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்பது பற்றி சில ஹதீஸ்கள் வந்துள்ளன.

என்றாலும், பெண்களுக்கு பர்ளான தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு மஸ்ஜிதுக்கு செல்வதற்கு ஆர்வமூட்டப்படவில்லை. மாறாக அவர்கள் தங்களது வீடுகளில் தொழுது கொள்வது மிகச் சிறந்தது என்றே வலியுறுத்தியும், ஆர்வமூட்டியும் ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. உதாரணமாக:

عن أم حميد امرأة أبي حميد الساعدي رضي الله عنهما : ( أنها جاءت النبي صلى الله عليه وسلم فقالت : يا رسول الله إني أحب الصلاة معك قال : قد علمت أنك تحبين الصلاة معي ، وصلاتك في بيتك خير لك من صلاتك في حجرتك ، وصلاتك في حجرتك خير من صلاتك في دارك، وصلاتك في دارك خير لك من صلاتك في مسجد قومك ، وصلاتك في مسجد قومك خير لك من صلاتك في مسجدي ، قال : فأمرت فبني لها مسجد في أقصى شيء من بيتها وأظلمه فكانت تصلي فيه حتى لقيت الله عز وجل ) . رواه أحمد (27090 )

உம்மு ஹுமைத் ரழியல்லாஹு அன்ஹா என்ற பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யாரஸூலல்லாஹ் நான் உங்களுடன் தொழ விரும்புகிறேன் எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் நீங்கள் என்னுடன் சேர்ந்து தொழுவதை விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். (என்றாலும்) உங்களது அறையில் தொழுவது உங்களது மண்டபத்தில் தொழுவதை விட சிறந்ததாகும். மண்டபத்தில் தொழுவது வீட்டில் தொழுவதை விட சிறந்ததாகும். தனது கூட்டத்தாரின் மஸ்ஜிதில் தொழுவது எனது மஸ்ஜிதில் தொழுவதை விட சிறந்ததாகும். இதனை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண்மணி அவளது வீட்டின் இருண்ட மூலையில் தொழுமிடம் ஒன்றை அமைத்து, மரணிக்கும் வரை அவ்விடத்திலே தொழுதார்கள்.  'நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் : 27090'

அதேபோன்று, 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்காலப் பெண்கள் புதிதாக உண்டாக்கியுள்ளவற்றைக் கண்டிருப்பார்களேயானால் பனூ இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதைப்போன்று அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மஸ்ஜித்களை விட்டும்) தடுத்திருப்பார்கள்.  என்ற ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. (நூல் : ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண்: 869)'                 

இவ்விடயமாக ஷாபிஈ மத்ஹபின் இமாம்களில் ஒருவரான இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தனது துஹ்பதுல் முஃதாஜ் எனும் நூலில் பின் வருமாரு கூறுகிறார்.

أَمَّا الْمَرْأَةُ فَجَمَاعَتُهَا فِي بَيْتِهَا أَفْضَلُ لِلْخَبَرِ الصَّحِيحِ { لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرُ لَهُنَّ } ، فَإِنْ قُلْت إذَا كَانَتْ خَيْرًا لَهُنَّ فَمَا وَجْهُ النَّهْيِ عَنْ مَنْعِهِنَّ الْمُسْتَلْزِمِ لِذَلِكَ الْخَيْرِ قُلْتُ أَمَّا النَّهْيُ فَهُوَ لِلتَّنْزِيهِ كَمَا يُصَرِّحُ بِهِ سِيَاقُ هَذَا الْحَدِيثِ ثُمَّ الْوَجْه ُ حَمْلُهُ عَلَى زَمَنِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ عَلَى غَيْرِ الْمُشْتَهَيَاتِ إذَا كُنَّ مُبْتَذَلَاتٍ ، وَالْمَعْنَى أَنَّهُنَّ ، وَإِنْ أُرِيدَ بِهِنَّ ذَلِكَ وَنَهَى عَنْ مَنْعِهِنَّ ؛ لِأَنَّ فِي الْمَسْجِدِ لَهُنَّ خَيْرًا فَبُيُوتُهُنَّ مَعَ ذَلِكَ خَيْرٌ لَهُنَّ ؛ لِأَنَّهَا أَبْعَدُ عَنْ التُّهْمَةِ الَّتِي قَدْ تَحْصُلُ مِنْ الْخُرُوجِ لَا سِيَّمَا إنْ اُشْتُهِيَتْ أَوْ تَزَيَّنَتْ وَمِنْ ثَمَّ كُرِهَ لَهَا حُضُورُ جَمَاعَةِ الْمَسْجِدِ إنْ كَانَتْ تُشْتَهَى وَلَوْ فِي ثِيَابٍ (كتاب صلاة الجماعة، تحفة المحتاج)

அதன் சாரம் பின் வருமாறு:

'உங்கள் பெண்களை மஸ்ஜித்களை விட்டும் தடுக்காதீர்கள். அவர்களது வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது' என்ற ஸஹீஹான ஹதீஸின் பிரகாரம் பெண் வீட்டில் ஜமாஅத்தாக தொழுவது மிகவும் சிறந்தது எனப் புலனாகிறது.

எனவே, பெண்கள் மஸ்ஜிதுக்கு சென்று ஜுமுஆ மற்றும் பர்ளான தொழுகைகளைத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்தாலும், அவ்விடயம் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்படவில்லை என்பது ஆண்களைப் போன்று பெண்களும், இவ்வாறு சிரமத்துடன் மஸ்ஜிதுக்கு சென்று தொழவேண்டிய அவசியம் இல்லை என்பதையே உணர்த்துகின்றது. பெண்களுக்கு இலகு படுத்தப்பட்ட ஒரு விடயத்தில், தானாகவே சிரமத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மேலும், இவ்வாறு பெண்கள் வீடுகளில் தொழுதுகொள்வதனால், ஆண்களும் பெண்களும், குறிப்பாக வாலிப சமுதாயம் ஒரிடத்துக்கு அடிக்கடி வருதனால் ஏற்படும் விபரீதங்களை விட்டும் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கலாம்.

இலங்கையில், மஸ்ஜித்களில் பெண்களுக்கென்று குறிப்பாக ஜுமுஆத் தொழுகைக்காக பிரத்தியோக ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை என்பதையும் நாம் அறிவோம். ஓரிரு இடங்களில் புதிதாக பெண்களுக்கென்று ஜுமுஆ ஆரம்பிக்கும் பொழுது, ஆண்களுக்கே இடப்பற்றாக்குறை இருக்கும் இந்நிலையில், மற்ற இடங்களிலும் புதிதாக பெண்களுக்கென்று ஜுமுஆ ஆரம்பிக்கப்பட்டு பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

இவ்வாறு பல விடயங்களைக் கவனத்திற்கொண்டு பெண்கள் தமது தொழுகைகளை தத்தமது வீடுகளில்; தொழுது கொள்வது சிறந்தது என்றும், அவர்களுக்காக மஸ்ஜித்களில் ஜுமுஆவுக்கான ஏற்பாடுகள் செய்யத் தேவையில்லை என்றும், இவ்விடயத்தில் மஸ்ஜித் நிர்வாகிகள், இயக்கங்கள் ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.