தராவீஹ் தொழுகையின் றக்அத்துக்களுடைய எண்ணிக்கை பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

றமழான் அமல்களுக்குரிய மாதமாகும் நபியவர்கள் அம்மாதத்தில் தொழுகை, சதகா, குர்ஆன் திலாவத் துஆ ஆகியவற்றில் அதிகம் ஈடுபட்டுள்ளார்கள், மக்களை ஈடுபடுமாறு தூண்டியுமுள்ளார்கள். அவ்வாறு றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுமாறு தூண்டிய தொழுகையே தறாவீஹ் தொழுகையாகும்.

தறாவீஹ் தொழுகையின் ரக்அத்கள் எத்தனை என்பதில் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளன. இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் றஹிமஹுமுல்லாஹ் போன்றவர்கள் அந்தத் தொழுகை இருபது றக்அத்துகள் என்றும் இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் முப்பத்தாறு றக்அத்துகள் என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

எவரேனும், இருபது றக்அத்துக்களை விட அதிகமாகவோ குறைவாகவோ தன் வசதிக்கேற்ப தொழுதுகொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. கூடுதலாகத் தொழுபவர் குறைவாகத் தொழுபவரையோ, குறைவாகத் தொழுபவர் கூடுதலாகத் தொழுபவரையோ குறை காண்பதும், அவரை அதைவிட்டும் தடுப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும். அதற்காகச் சண்டையிட்டுக் கொள்வதும் பிரச்சினைப்படுவதும் றமழானின் நன்மையை இல்லாமல் செய்துவிடும்.

எனவே, அமல்கள் செய்ய வேண்டிய காலத்தில் அவசியமற்ற தர்க்கங்களிலோ, மற்றவர்களின் அமல்களில் குறைகாண்பதிலோ ஈடுபடாமல், தான் செய்யும் அமல்கள் அல்லாஹ்விடம் கபூலாக பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு