அனர்த்தங்களின் போது ஜுமுஆ கடமையாதல் சம்பந்தமாக ஃபத்வாக்கோரி 15.06.2011 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டால் ஜுமுஆ கடமையாகாது.

 عن عبد الله بن عباس رضي الله عنهما أنه قال لمؤذنه في يوم مطير: إذا قلت أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله فلا تقل حي على الصلاة قل صلوا في بيوتكم. قال: فكأن الناس استنكروا ذاك، فقال: اتعجبون من ذا، قد فعل ذا من هو خير مني، إن الجمعة عزمة وإني كرهت أن أحرجكم فتمشون في الطين والدحض. باب الصلاة فى الرحال فى المطر , كتاب الصلاة, صحيح مسلم"

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஒரு தடவை (மழை நேரத்தில்) தனது முஅத்தினிடம் அதானில்

أشهد أن لا إله إلا الله,       أشهد أن محمد رسول الله

என்று கூறியதன் பின் حي على الصلاة  என்று கூறாமல், “உங்களது வீடுகளிலே தொழுதுகொள்ளுங்கள்” என்று கூறும்படி கூறினார்கள். மக்கள் ஆச்சரியப்பட்ட பொழுது கூறினார்கள்: நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? என்னைவிடவும் சிறந்த நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு செய்திருக்கின்றார்கள்.  நிச்சயமாக ஜுமுஆ கடமையான ஒன்றாகும். சேற்றிலும், வழுக்கும் இடங்களிலும் நடந்து வந்து உங்களைச் சிரமத்தில் ஆக்குவதை வெறுத்தேன் என்று கூறினார்கள்.

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் முஸ்லிமுடைய விரிவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

وفي هذا الحديث دليل على سقوط الجمعة بعذر المطر ونحوه وهو مذهبنا ومذهب آخرين وعن مالك رحمه الله تعالى خلافه (باب الصلاة فى الرحال فى المطر , كتاب الصلاة, صحيح مسلم)

“மழை போன்ற காரணங்களால் (ஜுமுஆ நடக்கும் இடத்திற்கு சமுகமளிக்க முடியாமலானால்) ஜுமுஆ கடமையாகாது”

எனவே, மழை, வெள்ளம் போன்ற தகுந்த காரணங்களுக்காக ஜுமுஆ கடமையாகாதவர்கள் பிறிதோரிடத்தில் ஜுமுஆ நடாத்த வேண்டிய அவசியமில்லை. ளுஹ்ருடைய தொழுகையைத் தொழுதால் போதுமானது. அவ்வாறு ஜுமுஆ நடாத்துவதிலும் தவறில்லை. ஆனால் ஜுமுஆ நடாத்துவதற்கான நிபந்தனைகளைக் கவனத்திற் கொள்ளல் அவசியமாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ்