வசிய்யத், கடன் பற்றி சில விடயங்களில் ஃபத்வாக் கோரி தங்களால் 23.12.2011ஆந் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

1. ஒருவர் மரணித்த பின் அவர் செலுத்தவேண்டிய கடன்கள் ஏதேனும் இருப்பின் அவை, அவரது சொத்துக்கள் அனந்தரக்காரர்களுக்குப் பிரிக்கப்படுமுன் நிறைவேற்றப்படல் வேண்டும். மர்ஹூம் ஜவாத் என்பவர் ஹஜ் கடமைக்காக செல்லும் போது 256,000/= ரூபாவை குறிப்பிட்ட குடும்ப உறவினர் ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றதற்கு இரண்டைவிட அதிகமான தகுந்த சாட்சிகள் இருப்பதனால் அதை அவரது சொத்திலிருந்து நிறைவேற்றுதல் வேண்டும்.

2. தனது குடும்ப உறவினர் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு “இவர்களை நீண்ட காலமாக நான் பராமரித்து வருகிறேன். தொடர்ந்தும் பராமரிக்க எண்ணியுள்ளேன்” என்று கூறுவது மாத்திரம் வசிய்யத் ஆகாது. ஏனெனில் வசிய்யத் செய்யும் பொழுது “வசிய்யத்” அல்லது “எனது மரணத்தின் பின்” என்ற வார்த்தைகளைக் கூறியிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளைக் கூறியிருந்தால் அவரது நிய்யத்தைக் கவனித்திற் கொள்ளப்படும். அவரது நிய்யத் வசிய்யத் செய்வது தான் என அவர் (வசிய்யத் செய்தவர், தான் மரணிக்க முன்) அல்லது அவரது வாரிஸ்கள் (வஸிய்யத் செய்தவர் மரணித்ததன் பின்) உறுதிப்படுத்தினால் அது வஸிய்யத்தாக கருதப்படும். உறுதிப்படுத்தவில்லையெனில் வசிய்யத்தாக கருதப்படாது.

3. ஒருவருக்கு, தான் ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்ததன் பின் வீடு ஒன்று கட்டித் தருவதாக கூறுவது வசிய்யத் ஆகாது. மாறாக அது தான் உயிரோடு இருந்தால்

4. செய்து தருவேன் எனக் கூறிய ஒரு வாக்குறுதியாகும். அதை அவரால் நிறைவேற்ற முடியாமலாகிவிட்டது. விரும்பினால் அவரது குடும்பத்தினர் அதை நிறைவேற்றலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு