Subject : மாற்று மதத்தைப் பிரதிபலிக்கும் சின்னங்களை தங்கத்தால் செய்து விற்றல்

FATWA # 09/ACJU/FTW/2012/0158

ஆக 05, 2019

வெளியிடப்பட்ட

ஹலால் மற்றும் ஹராம்

மாற்று மதத்தைப் பிரதிபலிக்கும் சின்னங்களை தங்கத்தால் செய்தல் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் 02.05.2011ஆந் திகதி அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அல்லாஹ் அல்லாத எப்பொருளையும் வணங்குவது ஷிர்க் எனும் மன்னிக்கப்படாத பெரும் பாவங்களில் ஒன்றாகும். அவ்வாறே, அல்லாஹ் அல்லாத எப்பொருளையேனும் வணங்குவதற்கு உதவியாக இருப்பதும் பெரும் பாவமாகும். இணைவைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது போன்று அதற்கு எவ்வகையிலும் உடந்தையாக இருப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

“நன்மைக்கும், இறையச்சத்திற்கும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள், பாவத்திற்கும் அத்துமீறலுக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டாம்.” (அல் – மாஇதா - 02)

மேலும், உயிருள்ள பொருட்களை தமது கைகளால் உருவாக்குவது ஹராம் எனப் பல ஹதீஸ்களில் எச்சரிக்கப்பட்டுள்ளன. 

عن سعيد بن أبي الحسن قال كنت عند ابن عباس رضي الله عنهما إذ أتاه رجل فقال يا أبا عباس إني إنسان إنما معيشتي من صنعة يدي وإني أصنع هذه التصاوير فقال ابن عباس لا أحدثك إلا ما سمعت من رسول الله صلى الله عليه وسلم سمعته يقول "من صور صورة فإن الله معذبه حتى ينفخ فيها الروح وليس بنافخ فيها أبدا فربا الرجل ربوة شديدة واصفر وجهه فقال ويحك إن أبيت إلا أن تصنع فعليك بهذا الشجر كل شيء ليس فيه روح" (باب بيع التصاوير التى ليس فيها روح وما يكره من ذلك, كتاب البيوع, صحيح البخاري)

ஸஈத் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: “நான் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுடன் இருந்தேன். அந்த நேரத்தில் ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “அபூ அப்பாஸே, எனது சம்பாத்தியம் என் கரத்தினால் செய்யும் தொழிலாகும். நான் இந்த உருவங்களைச் செய்கிறேன்” என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறினார்கள்: “நான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கேட்டதையே கூறுகிறேன். “யார் ஓர் உருவத்தைச் செய்கின்றாரோ, அவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அவரை வேதனை செய்வான். ஒரு போதும் அவருக்கு அதற்கு உயிர் கொடுக்க முடியாது.” என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த மனிதரின் முகம் பயத்தால் மஞ்சளித்தது. அப்பொழுது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் “உனக்கு அவ்வாறு அவசியம் செய்ய வெண்டுமென்றால் மரத்தையும் உயிரற்றவைகளையும் செய்துகொள்” என்று கூறினார்கள்.” (ஆதாரம்: சஹீஹ் அல்-புகாரி)

இமாம் அந்-நவவி ரஹிமஹுல்லாஹ் சஹீஹ் முஸ்லிமுடைய விரிவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

وقال النووي رحمه الله : قال أصحابنا وغيرهم من العلماء : تصوير صورة  الحيوان  حرام شديد التحريم ، وهو من الكبائر لأنه متوعد عليه بهذا الوعيد الشديد المذكور في الأحاديث وسواء صنعه بما يمتهن أو بغيره فصنعته حرام بكل حال لأن فيه مضاهاة لخلق الله تعالى ، وسواء ما كان في ثوب أو بساط أودرهم أو دينار أو فلس أو إناء أو حائط أو غيرها وأما تصوير صورة  الشجر ورحال الإبل وغير ذلك مما ليس فيه صورة  حيوان فليس بحرام هذا حكم نفس التصوير . ”شرح مسلم “

“உயிருள்ள பொருட்களைச் செய்தல் மிகக்கடுமையான ஹராம். மேலும் அது பெரும்பாவங்களிலிருந்தும் ஒன்றாகும்.”

எனவே, மேற்கூறப்பட்டவற்றிலிருந்து உயிருள்ளவை, மற்றும் மாற்று மதத்தினர் வணங்கும் அல்லது கெளரவப்படுத்தும் உருவம், சின்னம், இலட்சினை போன்ற எதையும் தங்கத்தினாலோ அல்லது வேறு பொருட்களினாலோ செய்வது, செதுக்குவது, வரைவது, விற்பது என்பன யாவும் ஹராம் என்பது தெளிவாகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு