மேற்படி விடயம் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2005.10.06 திகதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது. 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

'வக்ஃப்' என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். இதற்கு அடிப்படையாக பின்வரும் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் கூற்றை அடிப்படையாகக் கொள்கிறார்கள்.

ஒரு தடவை உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யாரஸூலல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இது வரை எனக்கு கிடைத்திராத மிகவும் பெறுமதியான சொத்தை கைபரில் பெற்றுக்கொண்டுள்ளேன். அதிலே நீங்கள் என்னை எவ்வாறு ஏவுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால், அது விற்கப்பட, நன்கொடையாக வழங்கப்பட, அனந்தரமாக்கப்பட முடியாத, ஸதகாவாக 'வக்ப்' செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய் உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்டவர்களுக்கும் போராளிகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிக்கும் வக்ப் செய்தார்கள்.

நூற்கள் : சஹீஹ் அல் புகாரி, ஹதீஸ் எண்: 2586;.

ஒரு பொருளை வக்ஃப் செய்த நபர் எந்த நோக்கத்துக்காக அதை வக்ஃப் செய்தாரோ அந்நோக்கத்திற்கு பங்கம் ஏற்படாமலும், அதனை மாற்றாமலும் அதனைப் பயன்படுத்துவது  

அதன் நிருவாகிகளின் கடமையாகும் என்பதுடன் தக்க காரணம் இன்றி அப்பொருளை அது வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்துவது மிகப் பெரிய தவறுமாகும்.

நீங்கள் உங்கள் கடிதத்தில் வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் என்று குறிப்பிட்டதற்கு அமைய தொழுகை சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே அந்த மஸ்ஜிதைப் பயன்படுத்து முடியும்.

அதற்கு மாறாக வேறு தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்துவது அனுமதிக்க முடியாத காரியமாகும். ஆகையால், மஸ்ஜிதின் கீழ்மாடியில் கடைத்தொகுதிகளைக் கட்டி கூலிக்கு கொடுத்தல் எவ்விதத்திலும் அனுமதியளிக்கப்படமாட்டாது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.