Subject : இஸ்லாமியப் பெண் ஆசிரியைகள் அணியும் ஆடை பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 07/ACJU/FTW/2012/0156

ஆக 05, 2019

வெளியிடப்பட்ட

பெண்கள்

இஸ்லாமியப் பெண் ஆசிரியைகள் அணியும் ஆடை ஷரீஆவின் பார்வையில் எவ்வாறு அமைய வேண்டும் என்று வினவி 2011.12.06 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு மாண்பையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் மார்க்கமாகும். அது ஆண்களும் பெண்களும் தமது நடை உடை பாவனைகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளது.

குறிப்பாக, ஆசான்கள் மாணவர்களது வழிகாட்டிகளாவார்கள். அவர்களிடமிருந்து கல்வியைப் பெறுவது போன்று அவர்களது வெளித்தோற்றம், ஆடை, அணிகலன்கள் என்பவற்றைப் பார்த்து மாணவ மாணவிகள் பல பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே, ஆசான்கள் தமது அறிவுக்கு முக்கியத்துவமளிப்பது போன்று தமது நிறைவான ஆடை, வெளித்தோற்றத்தையும், மாணவர்கள் பார்த்து பின்பற்றுமளவு சீர்ப்படுத்திக் கொள்ளல் அவசியமாகும்.

பெண்கள் ஆடை பற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் கூறும் போது:

"وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهنسورة النور : 31

“மேலும், (நபியே!) நீர் விசுவாசிகளான பெண்களுக்கு கூறுவீராக! தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம், தங்கள் முந்தானைகளை தம் மேற்சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ளவும்.” (அந்-நூர்: 31)

"ياأيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما"سورة الأحزاب : 59

“நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்வியருக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக (வாய்ப்புள்ள) நெருக்கமானதாகும். அதனால் அவர்கள (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.”  (அல்-அஹ்ஸாப்: 59)

மேற்கூறப்பட்ட இறைவசனங்களின் மூலம் பெண்கள் தமது அலங்காரத்தை வெளிக்காட்டாது தம்மை மறைக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. எனவே, முஸ்லிமான ஒரு பெண் தனது முகம், இரு கைகள் உட்பட முழு உடலையும் மறைப்பது அவசியமாகும். இதுவே ஒரு முஃமினாவாகிய பெண்ணின் மறைக்கப்படவேண்டிய பகுதி பற்றி வந்துள்ள அல்-குர்ஆனிய வசனங்களுக்கும், திரு நபிமொழிகளுக்கும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கமாகும். எனினும், சிகிச்சை, சாட்சியம், திருமணம் பேசப்படும் பெண்ணைப் பார்த்தல், பாதுகாப்புக் காரணங்களுக்காக சோதனைச் சாவடிகளில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தேவைப்படும் கட்டாய நிலைகள் போன்ற இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட சமயங்களில் தேவையான அளவை மாத்திரம் வெளிக்காட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.

சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஒரு பெண் தனது முகத்தையும் இரு கைகளின் மணிக்கட்டுகளையும் தவிர உடலின் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கவேண்டும். முகத்தையும், மணிக்கட்டு வரை இரு கைகளையும் திறப்பதற்கு அனுமதியுண்டு. எனினும், ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்து காணப்படும் தற்காலத்தில் பெண்கள் தமது அழகின் அடிப்படையாய் விளங்கும் முகத்தை வெளிக்காட்டுவதனால் பிற ஆண்களினால் கவரப்பட்டு பல சமூக சீர்கேடுகள் ஏற்படுவதை நோக்கும் போது பெண்கள் தமது முகம், மணிக்கட்டு வரை இரு கைகள் உட்பட முழு உடலையும் மறைக்கவேண்டியதன் அவசியத்தை உணரமுடிகின்றது.

எனவே, முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய ஷரீஆ முறைப்படி ஆடை அணிந்து பாடசாலைகளிலும், ஏனைய தொழில் புரியும் இடங்களிலும் கடமை புரிவதற்கு, அதிகாரத்தில் உள்ளவர்கள் பூரண அனுமதியையும் ஏற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே ஆரோக்கியமானதாகும்.                                                                          

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்.