தொலைக்காட்சிப் பெட்டி விற்றல் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தொலைக்காட்சி என்பது வானொலி, பத்திரிகை, சஞ்சிகை முதலான தொலைத் தொடர்பு சாதனங்களில் ஒன்றாகும். தொலைக்காட்சி தன்னளவில் நல்லதாகவோ கேடானதாகவோ அல்லது ஹலாலானதாகவோ ஹராமானதாகவோ அமையக் கூடியதல்ல. அது எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அதன் நன்மையும் தீமையும் அதைப் பற்றிய மார்க்கத் தீர்ப்பும் தீர்மானிக்கப்படும். தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு கத்திக்கு ஒப்பிடலாம். அது ஒரு கொலைகாரனின் கைகளில் இருக்கும் போது அதனால் நாசம் விளையும். ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கரங்களில் இருக்கும் போது அதனால் நன்மை விளையும். கத்தி அதனளவில் நன்மை பயப்பதுமில்லை, கேடுவிளைவிப்பதுமில்லை. இது போன்றே தொலைக் காட்சியும் கருதப்படத்தக்கதாகும்.

இன்று தொலைக்காட்சி கல்வியறிவு அறிவு மேம்பாட்டுக்காகவும், ஆன்மீக ஒழுக்கப் பண்பாட்டுக்காகவும், உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதே வேளையில் உலகில் அசிங்கங்களையும் அநாச்சாரங்களையும் பரப்பவும் அது தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒப்பீட்டு ரீதியில் இன்று தொலைக்காட்சி என்பது ஆக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை விட, அழிவிற்கே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஆனால் பொருளை வாங்குபவர் அதை பாவத்திற்கு பயன்படுத்துவார் என்பது உறுதியாகத் தெரிந்தால் அவருக்கு மட்டும் அப்பொருளை விற்பது ஹராமாகும். ஏனெனில் பாவத்திற்கு உதவி செய்வதும் பாவமாகும்.

அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:

 “நன்மைக்கும், இறையச்சத்திற்கும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள், பாவத்திற்கும் அத்துமீறலுக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்காதீர்கள்.” (அல்-மாஇதா- வசனம்: 02)

மேலும் அல்லாஹ் தஆலா பிறிதோர் இடத்தில் :

“மனிதர்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் வீணான விடயங்களை விலைக்கு வாங்கி அல்லாஹ்வுடைய வழியில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.”                      

(ஸூரத்து லுக்மான், வசனம்: 06)

என்று கூறுவதிலிருந்தும் மக்களை கெடுக்கும் வீணானவற்றை வாங்குவது கூடாது என்பது தெரியவருகின்றது.

எனவே, யார் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவதையும் விற்பதையும் (ஹராத்திற்கு இட்டுச் செல்லும் வாயிலை மூடும் நோக்கோடு – سد الذرائع – அடிப்படையில்) தவிர்ந்து கொள்கிறாரோ அது அவரின் பேணுதலைக் காட்டும். ஆயினும், தொலைக்காட்சிப் பெட்டியை கொள்வனவு செய்வதையோ அல்லது விற்பனை செய்வதையோ ஹராமானது என கருதமுடியாதுள்ளது. ஏனெனில் தன்னளவில் ஹராமாகாத எப்பொருளையும் வாங்கவும் விற்கவும் அனுமதி உண்டு.

 எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு