Subject : இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 008/F/ACJU/2009

ஆக 04, 2017

வெளியிடப்பட்ட

பெண்கள்

இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) ஷரீஆவின் பார்வையில் எவ்வாறு அமைய வேண்டும் என்று வினவி 2007.11.27 ஆம் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு மாண்பையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் மார்க்கமாகும். அது ஆண்களும் பெண்களும் தமது நடை உடை பாவனைகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டியுள்ளது. அல்லாஹ் அல்-குர்ஆனில் பெண்களைப் பற்றி கூறும் போது:

'மேலும், (நபியே!) நீர் விசுவாசிகளான பெண்களுக்கு கூறுவீராக! தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக்கொள்ளவும், அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம், தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ளவும்.'(அந்-நூர்: 31)

'நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்வியருக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலைமுந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக (வாய்ப்புள்ள) நெருக்கமானதாகும். அதனால் அவர்கள (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.' (அல்-அஹ்ஸாப்: 59)

மேற்கூறப்பட்ட இறை வசனங்களின் மூலம் பெண்கள் தமது அலங்காரத்தை வெளிக்காட்டாது தம்மை மறைக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவே, முஸ்லிமான ஒரு பெண் தனது முகம், இரு கைகள் உட்பட முழு உடலையும் மறைப்பது அவசியமாகும். இதுவே மிகப் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். எனினும், சிகிச்சை, சாட்சியம், திருமணம் பேசப்படும் பெண்ணைப் பார்த்தல், பாதுகாப்புக் காரணங்களுக்காக சோதனைச் சாவடிகளில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தேவைப்படும் கட்டாய நிலைகள் போன்ற இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட சமயங்களில் தேவையான அளவை மாத்திரம் வெளிக் காட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.

சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஓரு பெண் தனது முகத்தையும் இரு கைகளின் மணிக்கட்டுகளையும் தவிர உடலின் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கவேண்டும்.  முகத்தையும் கைகளின் மணிக்கட்டுகளையும்  திறப்பதற்கு அனுமதியுண்டு. எனினும், ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்து காணப்படும் தற்காலத்தில் பெண்கள் தமது அழகின் அடிப்படையாக இருக்கும் முகத்தை வெளிக்காட்டுவதனால் பிற ஆண்களினால் கவரப்பட்டு பல சமூக சீர்கேடுகள் ஏற்படுவதை நோக்கும் போது பெண்கள் தமது முகம், மணிக்கட்டுகள் உட்பட முழு உடம்பையும்  மறைக்கவேண்டியதின் அவசியத்தை உணரமுடிகின்றது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.