எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
வஸிய்யத் என்பது தனது சொத்தில் இருந்து ஒரு பகுதியை மெளத்திற்குப் பின்னால் கொடுப்பதாக கூறிவைத்தலாகும். தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதிவரை வஸிய்யத் செய்யலாம். அதை விடவும் அதிகமாக செய்வதாக இருந்தால் அனந்தரக்காரர்களின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும்.
அவ்வாறு ஒரு பொருளை ஒரு நபருக்கோ அல்லது ஒரு தரப்பினருக்கோ கொடுப்பதாக வஸிய்யத் செய்துவிட்டு மரணித்தால், மரணித்தவரது வஸிய்யத்தை நிறைவேற்றுவது அனந்தரக்காரர்களுக்குக் கடமையாக மாறிவிடும்.
என்றாலும், வஸிய்யத் செய்தவர் உயிரோடு இருக்கும் வரை தான் செய்த வசிய்யத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யலாம் என்பதுடன் அதை அவர் வாபஸ் பெறவும் முடியும்.
“யமன் வாசிகள் வசிய்யத் செய்துவிட்டு அதை மாற்றுகின்றார்களே என உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்: “தனது வசிய்யத்தில் விரும்பியதை மாற்றிக்கொள்ளட்டும் என்று கூறினார்கள்.” (நூல்: முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)
இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி றஹமஹுல்லாஹ் தனது துஹ்பாவில், கிதாபுல் வசாயா எனும் பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
“(வசிய்யத் செய்தவருக்கு) மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி வசிய்யத்தை வாபஸ் பெற முடியும்”
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு