நண்டு சாப்பிடுவது பற்றிய மார்க்கத் தீர்ப்புக் கோரி தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான உணவை  மனிதன் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் உணவுகளை கடலிலும் கரையிலும் படைத்துவைத்துள்ள அல்லாஹ் அவற்றில் சிலதை உட்கொள்வதற்கு ஆகுமானதாகவும், இன்னும் சிலதை ஆகாததாகவும் ஆக்கியுள்ளான்.

இதைப் பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

'நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் முஹம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆகுமாக்கியும் வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும்விடுவார்.' (அல்-அஃறாஃப்: 157)

'உங்களுக்கும் இதர பிரயாணிகளுக்கும் பயன் பெறுவதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது.'  (அல்-மாயிதா: 96)

மேலும் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடலுடைய விடயத்தில் கூறும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

'அதன் நீர் சுத்தமானது, அதில் மரணித்த (பிராணி) ஹலாலானது' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: ஸுனனு அபீ தாவூத் - ஹதீஸ் எண்: 83

இமாம் அந்-நவவி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:

'தவளையைத் தவிர கடலில் வாழ்ந்து மரணித்த அனைத்தும் ஆகுமாக்கப்பட்டவையாகும் என்பதே நம்பகமான வலுவான சொல்லாகும்.' (அல்-மஜ்மூஃ - பாகம்: 09, பக்கம்:23)

நண்டு ஈரூடகவாழிகளில் (நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள்) ஒன்றாக இருப்பதனால் அதை உண்ணும் விடயத்தில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவியபோதிலும் கடலில் மட்டும் வாழக்கூடிய கடல்நண்டு உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பதே மார்க்க அறிஞர்களின் முடிவாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.