முஸ்லிம் பாடசாலைகளில் இசைக்கேற்ப தேக அப்பியாசம், வாத்திய இசைக் குழுக்கள் அமைத்தல் சம்பந்தமாகத் தெளிவு கோரி தாங்களால் 2005.04.25 தேதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மனிதர்கள் என்றும் அல்லாஹ்வின் நினைவுடன் இருப்பதை இஸ்லாம் வலியுறுத்தி உள்ளது.  அல்லாஹ்வின் நினைவை விட்டும் மக்களைப் பராக்காக்கக் கூடிய அனைத்து விடயங்களும் தடுக்கப்பட்டுள்ளன. இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது:

'மனிதர்களில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து (மனிதர்களை) வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குபவர்களும் இருக்கின்றனர். மேலும்  (அல்லாஹ்வின் வசனங்களாகிய) அவைகளைப் பரிகாசமாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இத்தகையோர் - அவர்களுக்கு இழிவுதரும் வேதனையுண்டு'. (லுக்மான் - 06)

இவ்வசனத்திலுள்ள வீணான செய்திகள் என்ற பொருளைக்கொடுக்கும் 'லஹ்வுல் ஹதீஸ்' என்ற வார்த்தைக்கு இசைக்கருவிகள் என்பதே பொருளாகும் என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

'அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் தடுப்பதுடன், சொத்துக்களை வீணாக செலவளிப்பதன் பக்கமும் தூண்டுகின்ற காரணத்தினால் மதுபானம் தடைசெய்யப்பட்டதைப் போன்று இவ்விசைக்கருவிகளும்  தடைசெய்யப்பட்டுள்ளன', (அல்-பிக்ஹுல் இஸ்லாமிய்யு வஅதில்லத்துஹு - பாகம் : 04 , பக்கம் : 2665)

இசைக்கருவிகள்  தடைசெய்யப்பட்டுள்ளன என்பதனை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:

'விபச்சாரம், பட்டு, மதுபானம், இசைக்கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக எடுத்துக்  கொள்ளக்கூடிய கூட்டத்தினர்கள்; நிச்சயமாக எனது சமூகத்தில் தோன்றுவார்கள்.....' என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக்  அல்-அஷ்அரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண் : 5590)

எனவே, இசைக்கருவிகளை மையமாக வைத்து அமைக்கப்படும் வாத்திய இசையைக் கேட்டல், இசைக்கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் இஸ்லாமிய ஷரீஅத்தில் தடைசெய்யப்பட்ட விடயமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹலாலை எடுத்து நடக்கவும், ஹராத்தை விட்டு ஒதுங்கி வாழவும் நல்லருள்பாலிப்பானாக!

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்.