Subject : காபிர்களுக்கு ஸலாம் சொல்லல்

FATWA # 003/ACJU/F/2008

ஆக 04, 2017

வெளியிடப்பட்ட

பொதுவானவைகள்

காபிர்களுக்கு ஸலாம் சொல்வது பற்றிய மார்க்கத் தீர்ப்புக்  கோரி 2004.12.07 திகதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸலாம் என்பது முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் சந்திக்கும் போது ஒருவருக்கொருவர் செலுத்தும் காணிக்கையாகும். மேலும் ஒரு முஸ்லிம் ஸலாம் கூறும் போது அதற்கு பதில் சொல்வது அடுத்த முஸ்லிமின் மீது கடமையாகும். இது பற்றி ஏராளமான ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாத ஒருவருடன் நடந்து கொள்ளும் முறையை பின்வரும் ஹதீஸ்கள்தெ ளிவுபடுத்துகின்றன:

'யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நீங்கள் முதலில் ஸலாம் கூறாதீர்கள்' என அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: ஸஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 4376

'வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால் 'வ அலைக்கும்'  (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று பதில் கூறுங்கள்'  என்று அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: ஸஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 4369

மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கு ஸலாம் சொல்வதைத் தடைசெய்கின்றனவென்றால் காபிர்களுக்கு ஸலாம் சொல்வது அறவே கூடாது என்பது தெளிவான விஷயமாகும். இமாம் அந்-நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

'காபிர்களுக்கு ஸலாம் கூறுவது கூடாது. இதுதான் சரியான மத்கபாகும். இக்கருத்தையே அதிகமான மார்க்க அறிஞர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.'நூல்: அல்-மஜ்மூஃ - பாகம்: 04, பக்கம்: 327

எனவே காபிர்களுக்கு முதலில் ஸலாம் கூறுவது ஓரு முஸ்லிமுக்கு ஆகாது என்றும், காபிர்கள் முதலில் ஸலாம் கூறினால் 'வ அலைக்கும்' என்று பதில் கூற வேண்டும் என்பது அனேகமான மார்க்க அறிஞர்களின் முடிவாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.