பருவ வயதை அaடைந்த பெண்கள் அஹதிய்யாப் பாடசாலைகளில் கல்வி கற்றலும், கற்பித்தலும் பற்றிய தெளிவு கோரி தங்கள் நிர்வாக சபையால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2005.07.08 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பெண்கள் கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனினும் ஆண், பெண் இரு பாலாரும் கலந்து திரைகள் இன்றி ஓரிடத்தில், கற்கும் சூழலை இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்கவில்லை. ஏனெனில் இரு பாலார் கலப்பினால் பல தீமைகளும், விபரீதங்களும் ஏற்படுகின்றன. இதனை இன்றைய மேற்குலகின் தகவல்களும், கணிப்பீடுகளும் உறுதி செய்கின்றன.

தீமைகளும், ஒழுக்கவீனச் செயற்களும் சிறு பருவதவ்தில் இருந்தே தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீமைகள் நடைபெறலாம் என்று கருதப்படும் அதன் வழிகளை அடைத்தலும் கடமையாகும். இதன்  காரணமாகவே பத்து வயதுக் குழந்தைகளைக் கூட படுக்கையில் பிரித்து வைக்குமாறு ஷரீஆ கட்டாயப் படுத்துகின்றது. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:

'உங்கள் பிள்ளைகளை ஏழு வயதாகும் போது தொழுகையைக் கொண்டு ஏவுங்கள், பத்து வயதாகியும் அவர்கள் தொழாவிட்டால் அவர்களை அடித்துத் தொழவையுங்கள், அவர்களை படுக்கையில் பிரித்துவையுங்கள்' என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அம்ர் இப்னு ஷுஐப் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஸுனன் அபீ தாவூத் - ஹதீஸ் எண் : 495)

ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் கலப்பது பத்து வயதாகும் போதே தீமைகளுக்கு வழி வகுக்கும். எனவே கணிஷ்ட வகுப்புக்களில் இருந்தே ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் கலப்பது ஆகாது. அவ்வாறு கலப்பது தடுக்கப்பட வேண்டும். அத்துடன் தீமைகள் ஏற்படும் வழிகளை அடைத்தல் கடமை என்ற ஷரீஆவின் மூல விதியின் அடிப்படையில் மேற்படி கலப்பு கட்டாயம் தவிர்க்கப்பட்டு பிரித்தே வகுப்புக்களை நடாத்துவது முக்கியமாகும்.  (மஜ்மூஃ ஃபதாவா வமகாலாத் முதனவ்விஅஹ்- பாகம் : 05, பக்கம் : 234)

எதிர் பாலாரின் பார்வைகள் கூட கலக்கக் கூடாது, இதுவும் தீமைக்கு வழி வகுக்கும் என இஸ்லாம் கருதுகிறது. இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றது:

'(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிக் காத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்'. (அன்னூர் : 30)

மஸ்ஜித்கள், வணக்கங்களின் போது கூட இது விடயத்தில் நபித் தோழர்களின் பெண்கள் மிகவும் பேணுதலுடனும், கவனத்துடனும் செயற்பட்டுள்ளனர். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது:

'நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவார்கள். முஃமினான பெண்களும் அவர்களுடன் தொழுகையில் கலந்து கொள்வார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளால் தங்கள் மேணிகளை முழுமையாக மறைத்துப் போர்த்திக் கொண்டு வருவதனால் அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களை யாரும் அறியமாட்டார்கள்' என்று ஆஇஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண் : 365)

எனவே, எதிர் பால் கலப்புடன் கல்வி கற்பதற்கோ, கற்றுக் கொடுப்பதற்கோ பொதுவாக அனுமதி கிடையாது என்பதுவே மார்க்க அறிஞர்களது கருத்தாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.