Subject : மஸ்ஜித்களில் தொழுபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தல்

FATWA # 0145/ACJU/F/2006

ஆக 03, 2020

வெளியிடப்பட்ட

தொழுகை

மஸ்ஜித்களில் தொழுபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தல் சம்பந்தமாக வினவி தங்களால் அனுப்பப்பட்ட 2004.02.17 திகதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மஸ்ஜித்கள் மிகவும் புனிதமான இடங்களாகும். அவை தொழுதல், அல்-குர்ஆனை ஓதல், மனனமிடல், அல்லாஹ்வை திக்ர் செய்தல், இஃதிகாஃப் இருத்தல், அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், அல்-ஃபிக்ஹ் போன்றவற்றைக் கற்றல் அல்லது கற்பித்தல், உபன்னியாசம் புரிதல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் போன்ற முஸ்லிம்களுக்கு பொதுவாக பயனளிக்கும் விடயங்களுக்காகவே கட்டப்பட்டுள்ளன. அவைகளின் புனிதத் தன்மைகள் பேணப்பட வேண்டும் என்ற நோக்கில் அவைகளில் நடைபெறக் கூடாத தடை செய்யப்பட்ட சில காரியங்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக:

 • குளிப்பு கடமையானவர்கள் தரித்தல்,
 • சிறுநீர், மலம் கழித்தல், இரத்தம் குத்துதல்,
 • நஜிஸ்களை போடுதல்,
 • உருவப் படங்களை வைத்தல்,
 • வெள்ளைப் பூடு, வெங்காயம் போன்றவற்றை சாப்பிடுதல், அவற்றின் துர்வாடையுடன் நுழைதல்,
 • எச்சில் துப்புதல்,
 • மிருகங்கள், பைத்தியக்காரர்கள், பள்ளிவாசலின் மகிமைகளைப் புரிந்துகொள்ள முடியாத சிறுவர்கள் போன்றோர் பள்ளிவாயலுக்குள் அனுமதிக்கப்படல்,
 • தொழில் செய்தல்,
 • பிழையான அல்லது ஆபாசமான கருத்துக்கள் அடங்கிய பாடல்களைப் பாடல்,
 • வியாபாரம் செய்தல் (அத்தர், மிஸ்வாக் போன்றவையாயினும் சரியே),
 • காணாமல் போன பொருட்களைத் தேடுதல்,
 • அல்-குர்ஆன் ஓதுபவர்களுக்கும், தொழுபவர்களுக்கும் இடைஞ்சல் ஏற்படும் வகையில் சப்தமிட்டுப் பேசுதல்,
 • ஏசுதல், திட்டுதல், சண்டைபிடித்தல், வீண் வேலைகளில் ஈடுபடுதல் போன்றவை.

மஸ்ஜித் என்ற வார்த்தை ஸுஜூத் செய்யுமிடம் என்னும் பொருளைக் கொண்டுள்ளதால், தொழுகைக்கே மஸ்ஜிதில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பது உணர்த்தப்படுகின்றது.

'தவறிப்போன பொருளை மஸ்ஜிதில் தேடுவது கூடாது' என்பதைச் சுட்டிக்காட்டும் ஹதீஸ் அது போன்ற செயற்களான விற்றல், வாங்கல், வாடகைக்கு விடல், உடன்படிக்கைகள் செய்தல், சப்தத்தை உயர்த்தல் போன்றவையும் மக்ரூஹ் ஆனவையாகும்' என்ற  கருத்தைக் கொடுப்பதாக இமாம் அந்-நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது சஹீஹு முஸ்லிமின் விரிவுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். (ஷர்ஹு சஹீஹி முஸ்லிம் - பாகம் : 05, பக்கம் : 55)

'தூங்கிக் கொண்டிருப்பவருக்கும், தொழுது கொண்டிருப்பவருக்கும் குழப்ப நிலையை ஏற்படுத்துமாயின் சப்தமின்றி அல்குர்ஆனின் ஸுராக்களை ஓதுவதே ஸுன்னத்தாகும். அல்-குர்ஆனை சப்தமாக ஓதுவதால் முகஸ்துதி, அல்லது பிறருக்கு இடைஞ்சல் ஏற்படுமாயின் சப்தமின்றி ஓதுவதே மிகவும் ஏற்றமானதாகும்' என்று இமாம் ஷம்ஸுத்தீன் அல்-ஷிர்பீனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  (முக்னில் முஹ்தாஜ் - பாகம் : 01, பக்கம் : 363)

எனவே அல்-குர்ஆன் ஓதல் போன்ற சிறந்த இபாதத்களே தொழுது கொண்டிருப்போர்களுக்கு இடைஞ்சலாக அமையாது சப்தமின்றி ஓதுவதே மிகவும் ஏற்றமானதாகும் என்றிருக்குமாயின் ஏனைய விடயங்கள் கட்டாயம் இடைஞ்சல் இல்லாமல் அமையவேண்டும் என்பது தெளிவாகின்றது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.