Subject : கப்றுகளால் சூழப்பட்ட மஸ்ஜிதில் தொழுதல்

FATWA # 031/ACJU/F/2006

ஆக 03, 2020

வெளியிடப்பட்ட

தொழுகை

கப்றுகளால் சூழப்பட்ட மஸ்ஜிதில் தொழுவது கூடுமா என விளக்கம் கோரி தங்கள் நிர்வாக சபையால் அனுப்பி வைக்கப்பட்ட 2006.05.15 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தொழுகை மிகச் சிறந்த வணக்கங்களில் பிரதானமான ஒன்றாகும். அவ்வணக்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு உளத்தூய்மை, உள்ளச்சம், உடலமைதி, உடை, உடல், இடச் சுத்தம் போன்றவற்றுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன:

'விசுவாசிகள் திட்டமாக வெற்றியடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால் தம் தொழுகையில் மிக்க உள்ளச்சமுடையவர்கள்'  (அல்-முஃமினூன் : 1-2)

'எனவே, தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையை (நிறைவேற்றுவதை விட்டும்) பராமுகமாக இருப்போர். அத்தகையோர்தான் (மற்றவர்களுக்குக்) காண்பிக் (கவே தொழு) கிறார்கள்' (அல்-மாஊன் : 4-5)

தொழுகையின் போது தொழுகையாளிகளது ஓர்முகப்படுத்தப்பட்ட இறை சிந்தனையைச் சிதரச் செய்யும் சகல விடயங்களையும் ஷரீஆ கடுமையாகத் தடை செய்துள்ளது. மேற்படி வணக்கங்களின் போது ஓர்முகப்படுத்தப்பட்ட சிந்தனை இல்லாது நபிமார்கள். ரஸூல்மார்களுடைய கப்றுகளை முன்னோக்கி வணக்கங்களில் ஈடுபடுவது யூத, கிறிஸ்தவ சமூகங்களின் நடைமுறையாகும். இந்நடைமுறையை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது: 

நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுகயீனமுற்றிருந்த வேளையில் உம்மு ஸலமா, உம்மு ஹபீபா (றழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் ஹபஷா என்ற இடத்தில் தாங்கள் கண்ட கிறிஸ்தவர்களது கோயிலின் அழகையும், அதிலுள்ள உருவப் படங்களின் அழகையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். இதனைச் செவியுற்ற நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது தலையை உயர்த்தி, 'அவர்களில் (யூத, கிறிஸ்தவர்கள்) ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டால் அவரது கப்றின் மீது மஸ்ஜிதை கட்டிவிடுவார்கள், பின்னர் அந்தக் கப்றில் உருவப் படங்களையும் வரைந்து விடுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடத்தில் படைப்புக்களில் மிக மோசமானவர்களாவார்கள்' என்று சொன்னதாக ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண் : 1341)

கப்றுகள் இருக்குமிடங்களில் மஸ்ஜித்கள் கட்டப்பட்டு, அவ்விடங்களில் சபிக்கப்பட்டவர்களால் செய்யப்பட்டவை (கப்றுகளை முன்னோக்கி அவைகளை நோக்காகக் கொண்டு வணக்கங்களில் ஈடுபடல்) நடைபெற்று விடுமோ என்ற பயத்தினாலேயே  இவ்விடயம் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்விடங்களில் கப்றுகள் நோக்காகக் கொண்டு, அவற்றை முன்னோக்கி வணக்கங்களில் ஈடுபடல் நடைபெறவில்லையோ அவ்விடங்களில் இத்தடை கிடையாது. எனினும் தீமைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படாது தடுத்தல்  என்ற அடிப்படையில் சிலர் பொதுவாகவே இதனை தடை செய்துள்ளனர். இதுவே இங்கு உறுதியாக நோக்கப்பட வேண்டிய விடயமாகும் என்று இமாம் அஹ்மத் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீஸுக்கு விரிவுரை எழுதியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரி - பாகம் : 03, பக்கம் : 208)

மஸ்ஜித்களைச் சூழ கப்றுகள் உள்ள இடங்களில் அவ்விரண்டிற்குமிடையில் முழுமையாக தொடர்புகளைப் பிரிக்கும் தடை மதில்கள் அல்லது சுவர்கள் அமைக்கப்பட்டு, அங்கு அடக்கப்பட்டுள்ளவர்கள்  கண்ணியப்படுத்தப்படல், அவ்விடத்தில் தொழுவது சிறப்பாகவும், புனிதமாகவும் கொள்ளப்படல் போன்ற நோக்கங்கள் இன்றி அம்மஸ்ஜித்களில் தொழுவது ஆகுமானதாகும் என்று மேற்படி ஹதீஸின் நிழலில் இருந்து மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.