Subject : ஃபர்ழான தொழுகைகளை அல்லது அவற்றில் சிலவற்றை மறுத்தல்

FATWA # 024/ACJU/F/2006

ஆக 03, 2017

வெளியிடப்பட்ட

தொழுகை

ஒருவர் ஐவேளைத் தொழுகைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அதே வேளை அவற்றில் சில நேரத் தொழுகைகளை ஏற்றுக்கொள்கின்றார். இவர் மரணித்தால் முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் அடக்கம் செய்யலாமா எனக் கோரி தங்கள் நிர்வாக சபையால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஐவேளைத் தொழுகைகளான ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, சுப்ஹ் ஆகியவை இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் உள்ளவையாகும் என்பது அன்று தொட்டு இன்று வரை உலக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் ஒரு விடயமாகும். இதனைப் பருவமடைந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தினமும் குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது 'ஃபர்ழு அய்ன்' எனும் அவரவர் நிறைவேற்றியே ஆகவேண்டிய கட்டாயக் கடமையாகும். தொழுகையை நிறைவேற்றாது விடுவது பெரும் பாவமாகும். இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உறுதிப்படுத்துகின்றன:

'ஆகவே, (விசுவாசிகளே) நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும், காலைப் பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்துகொண்டிருங்கள். வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன. இன்னும் முன்னிரவிலும் (முன்னந்தி வேளை), நீங்கள் நடுப் பகலை அடையும் சமயத்திலும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்)'. (அல்-குர்ஆன் - 30, 17-18)

மாலைப் பொழுதை அடையும் போது என்ற சொற்பதம் மஃரிப், இஷாத் தொழுகைகளையும், காலைப் பொழுதை அடையும் போது என்ற சொற்பதம் சுப்ஹ்த் தொழுகையையும், முன்னிரவிலும் (முன்னந்தி வேளை) என்ற சொற்பதம் அஸ்ர் தொழுகையையும், நடுப் பகலை அடையும் சமயத்திலும் என்ற சொற்பதம் ழுஹ்ர் தொழுகையையும் (ஐவேளைத் தொழுகைகளையும்) குறிப்பதாக மேற்படி வசனங்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். (அல்-ஃபிக்ஹுல் மன்ஹஜி அலா மத்ஹபில் இமாமிஷ் ஷாஃபிஇய்யி - பா : 01, பக் : 102)

முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமன் பிரதேசத்துக்கு அனுப்பிவைத்த போது 'நீங்கள் அவர்களை, வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறுவதன் பக்கமும், முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று சாட்சி கூறுவதன் பக்கமும் அழைப்பீராக, அதற்கவர்கள் வழிப்பட்டால் அவர்கள் மீது அல்லாஹ் ஐந்து நேரத் தொழுகைகளை தினமும் கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பீராக!' என்று சொன்னார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(சஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண் : 1331, சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் எண் : 19)

'வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் மக்கள் சாட்சி கூறும் வரையும், தொழுகைளை நிலைநாட்டி ஸக்காத்தை கொடுக்கும் வரையும் போராடுமாறு நான் (அல்லாஹ்வால்) ஏவப்பட்டுள்ளேன். அவர்கள் அதனைச் செய்தால் இஸ்லாத்தின் உரிமையைக் கொண்டே அன்றி அவர்களது இரத்தங்களையும், சொத்துக்களையும் பாதுகாத்துக்கொண்டார்கள். அவர்களது விசாரணை அல்லாஹ்வின் மீதாயிருக்கும்' என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(சஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண் : 25, சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் எண் : 22)

கடமை என்பதை மறுத்தவராக ஃபர்ழான ஐவேளைத் தொழுகைகளையோ, அவற்றில் சிலவற்றையோ விட்டவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் (முர்தத்) ஆவார். அவரைத் தௌபாச் செய்து மீண்டு தொழுகை கடமை என்று ஏற்று நிலைநாட்ட வருமாறு ஏவுவது நாட்டுத் தலைவர் (இமாம்) மீது கடமையாகும். அதனை ஏற்றுத் தௌபாச் செய்து மீண்டு வந்தால் அவர் முஸ்லிமாவார். மீண்டு வரவில்லையாயின் மதம் மாறியவர் என்ற வகையில் அவர் கொலை செய்யப்படுவார். அவரைக் குளிப்பாட்டுவதோ, கஃபனிடுவதோ, தொழுவிப்பதோ, முஸ்லிம்களது மையவாடிகளில் அடக்கம் செய்வதோ ஆகாது.

(அல்-ஃபிக்ஹுல் மன்ஹஜி அலா மத்ஹபில் இமாமிஷ் ஷாஃபிஇய்யி - பா : 01, பக் : 104)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.