Subject : அதான் சொல்வதற்கு முன் சலவாத் சொல்வது பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 003/ACJU/F/2005

ஆக 01, 2020

வெளியிடப்பட்ட

தொழுகை

அதான் சொல்வதற்கு முன்னர் சலவாத் சொல்வது பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியத் தருமாறு வேண்டி தங்களது கிளையினால் 2004.04.06 ஆந் தேதியிடப்பட்டு எமக்கு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அதான் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய தொழுகைக்கு அழைப்பதற்காக செய்யப்படும் ஒரு வணக்கமாகும். அதில் சொல்லப்படும் சகல வசனங்களும் புனித வஹ்யின் மூலம் நிர்ணயிக்கப்பட்டவையாகும். அவைகளில் எவ்வித கூட்டல் குறைத்தல்களையும், மாற்றங்களையும் செய்யலாகாது என்பது சகலரும் அறிந்த ஒன்றே. அதானை எவ்வாறு ஆரம்பிப்பது, அதில் என்னென்ன சொல்லப்பட வேண்டும் என்பதும், நபிகளாரின் சமூகத்தில் அதான் சொல்லப்பட்ட விதமும் ஆதாரபூர்வமாக நபி மொழிகளில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன. அவைகள் எதிலும் அதானின் முன் சலவாத் சொல்வதற்கான ஆதாரம் கிடையாது. அவைகளில் சிலவற்றை அவதானிப்போம்:

  1. அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களை தொழுகைக்கு ஒன்று சேர்ப்பதற்காக அடிப்பதற்கு மணி தயார் படுத்துமாறு ஏவியபோது நான் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை ஒருவர் தன் கையில் ஒரு மணியை ஏந்தியவராக என்னைச் சுற்றினார். அவரைப் பார்த்து 'அல்லாஹ்வின் அடியாரே! இந்த மணியை நீங்கள் விற்பீர்களா என்று வினவினேன்'. அதற்கவர் 'இதைக் கொண்டு என்ன செய்வீர்' என்று வினவ 'இதனைக் கொண்டு தொழுகைக்கு அழைப்போம்' என்று சொன்னேன். அப்போது 'இதனை விட சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா' என்று கேட்டார். அதற்கு நான் 'ஆம்' என்று கூறினேன். அதற்கு அவர்:

الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر      

أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله

أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله

حى على الصلاة، حى على الصلاة

حى على  الفلاح، حى على الفلاح

الله أكبر، الله أكبر

لا إله إلا الله

என்று கூறும்படி கூறினார். பின்னர் சற்று விலகி 'இக்காமத்; சொன்னால்

الله أكبر، الله أكبر

أشهد أن لا إله إلا الله

أشهد أن محمدا رسول الله

حى على الصلاة 

حى على  الفلاح

قد قامت الصلاة، قد قامت الصلاة

الله أكبر، الله أكبر

لا إله إلا الله

என்று கூறுவீராக' என்றும் சொன்னார்.

காலையில் அல்லாஹ்வின் தூதரிடத்தில் நான் வந்து கண்ட கனவைப் பற்றி அவர்களிடத்தில் பிரஸ்தாபித்தேன். அதற்கு நபியவர்கள் 'அல்லாஹ் நாடினால் அது நிச்சயம் உண்மையான கனவாகும். எனவே பிலாலுடன் எழுந்து நீர் கனவில் கண்டதை அவருக்கு சொல்வீராக. அவர் அதனைக் கொண்டு அதான் சொல்லட்டும். ஏனெனில் அவர் உம்மை விட உயர்ந்த சப்தமுடையவர்' எனக் கூறினார்கள்.

நான் பிலாலுடன் எழுந்து அவருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர் அதனைக் கொண்டு அதான் சொன்னார். உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது வீட்டில் இருக்கும் நிலையில் இதனை (அதானை) செவிமடுத்த போது அவரது அங்கியை இழுத்துக் கொண்டு வெளியேறி வந்து 'அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பிவைத்தவன் மீது ஆணையாக அவர் கண்ட கனவைப் போன்றே நானும் கண்டேன்' எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் 'அல்லாஹ்வுக்கே புகழ்' என்று கூறினார்கள்.               (நூல் : அபூ தாவூத் ஹதீஸ் இல. : 499)

  1. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூற தான் செவியுற்றதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னில் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: முஅத்தின் அதான் சொல்வதைக் கேட்டால் அவர் சொல்வதைப் போன்று நீங்களும் (அதானிற்குப் பதில்) சொல்லுங்கள். பின் (அதான் முடிவடைந்த பின்னர்) என் மீது சலவாத் சொல்லுங்கள். ஏனெனில் யாரேனும் என் மீது ஒரு முறை சலவாத் சொன்னால் அல்லாஹ் அவர் மீது பத்து முறை சலவாத் சொல்வான். பின்பு அல்லாஹ்விடம் எனக்கு 'வஸீலா'வைக் கேளுங்கள். நிச்சயமாக அது (வஸீலா) சுவர்க்கத்தில் உள்ள ஒரு அந்தஸ்தாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கு மாத்திரம் கிடைக்க வேண்டியது. அவ்வடியானாக நான் இருக்க ஆசைப்படுகிறேன். எவரேனும் எனக்கு வஸீலாவைக் கேட்பாராயின் அவருக்கு எனது சிபாரிசு கிடைக்கும். (நூல் : முஸ்லிம். ஹதீஸ் இல. : 384)

மேற்படி ஹதீஸ்களின் ஒளியில் அதான் ஒலித்து முடிந்த பின் சலவாத் செல்லுவதுதான் ஸுன்னத்தாகுமே தவிர அதான் ஒலிப்பதற்கு முன் சலவாத்தோ, வேறெந்த ஓதல்களோ மார்க்கத்தில் கிடையாது என்பதும், அவை ஸுன்னத்தான அமல்களல்ல என்பதும் தெளிவாகிறது.

பிரதான நான்கு மத்ஹப்களின் இமாம்களிலும், ஷhபிஈ மத்ஹபின் பிரதான இமாம்களாகக் கருதப்படுகின்றவர்களில் எவரும் அதானின் முன் சலவாத் சொல்வது சுன்னத் என்ற கருத்தைக் கூறியதாக இல்லை. மாறாக ஷhபிஈ மத்ஹபின் முக்கிய இமாம்களில் ஒருவராகிய ஹிஜ்ரி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது 'அல்-பத்தாவல் குப்ரல் பிக்ஹிய்யஹ்' என்ற தொகுப்பில் இதனைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்கள்:

அதான் ஒலிப்பதற்கு முன் நபிகளாரின் மீது சலவாத் சொல்வது பற்றியும், அதான் முடிந்த பின் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' எனச் சொல்வது பற்றியும் நபி மொழிகள் எதிலுமே பிரஸ்தாபிக்கப்பட்டதாக நாம் காணவில்லை. மேலும் எமது (மத்ஹபின்) இமாம்களுடைய பேச்சிலும் இவை பற்றி கூறியிருப்பதாக நாம் காணவில்லை. ஆகையால் இவ்விரண்டு விடயங்களும் கூறப்பட்ட அவற்றினுடைய இடங்களில் சுன்னத்தான விடயங்களல்ல. எனவே, எவரேனும் குறித்த அவ்விடத்தில் அது ஒரு சுன்னத் என்ற நம்பிக்கையில் அவைகளில் எதையேனும் அவ்விடத்தில் செய்தால் அவர் அதை விட்டும் தடுக்கப்படுவார். ஏனெனில் அப்படிச் செய்வது ஆதாரமின்றி மார்க்கத்தில் ஒன்றை சட்டமாக்குவதாகும். யார் ஆதாரமின்றி மார்க்கத்தில் ஒன்றை சட்டமாக்குவாரோ அவர் அதனை விட்டும் தடுக்கப்பட்டு, விலக்கப்படுவார். (பாகம் : 01 அதானுடைய பாடம்)

மேலும் அந்நூலில் ஆதாரமற்ற இவ்வழக்கம் தோன்றிய வரலாறு பற்றி இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எழுதியுள்ளதை நோக்கும் போது எகிப்து நாட்டின் ஆட்சியாளர்களில் ஒருவர் மரணித்த வேளை அவரது சகோதரியின் கட்டளைப்படி அதான் ஒலிக்கும்போது அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதற்குப் பின் வந்த ஒரு ஆட்சியாளர் அப்பிரார்த்தனை முறையை இல்லாதொழிக்கும் நோக்கில் அதனை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சலவாத் சொல்லும் முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்ததாகவும் சுருக்கமாக நாம் விளங்க முடிகிறது.

எனவே நபிகளாரின் மீது சலவாத் சொல்வது பொதுவாக ஒரு சிறப்பான அமலாக இருந்த போதும் அதனை நபி வழியில் காட்டப்படாத விதத்தில் அதானுக்கு முன் என்பது போன்ற சில குறித்த இடங்களுக்குரிய அமலாகக் கருதிச் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் விளக்கத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

எனவே நாம் நபி வழியைத் தெளிவாக விளங்கி வணக்க வழிபாடுகளில் அதனையே பின்பற்ற வேண்டிய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். மார்க்க விடயங்களில் வீண் பிரச்சினைகளையும், குதர்க்க வாதங்களையும் கட்டாயமாகத் தவிர்ந்து உண்மையை விளங்கி, நன்மை கிடைக்கும் விதத்தில் எமது அமல்களை நாம் ஆக்கிக்கொள்வோமாக!

 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.