Subject : பள்ளியில் மேலதிமாக பாவனையற்ற நிலையில் உள்ள அல்-குர்ஆன் பிரதிகளை வெளியாருக்கு விநியோகித்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 009/ACJU/F/2004

ஆக 01, 2018

வெளியிடப்பட்ட

வக்ப் மற்றும் மஸ்ஜித்

பள்ளியில் தேங்கியிருக்கும் குர்ஆன் பிரதிகளை வெளியாருக்கு விநியோகித்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்புக் கோரி தெல்பிடிய அல்-பத்ர் ஜும்ஆப் பள்ளியின் நிர்வாக சபை உங்கள் முன்வைத்திருந்த கேள்வி சம்பந்தமாக 2004.01.15 திகதியிடப்பட்டு தங்கள் கிளை எமக்கு அனுப்பியிருந்த கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது. அதில் அல்-குர்ஆன் பிரதிகள் வக்பு செய்யப்பட்டவைகளா அல்லது  நன்கொடை அல்லது சாதாரணமான அடிப்படையில் பள்ளிக்குக் கொடுக்கப்பட்டவைகளா என்பது தெளிவில்லாமல் உள்ளது. எனவே, பலதையும் உள்ளடக்கும் விதத்தில் அதற்கான பதில் கீழே தரப்படுகின்றது:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பள்ளிவாசலுக்கு வழங்கப்படும் அல்-குர்ஆன் பிரதிகள் பெரும்பாலும் 'வக்ப்' என்ற ரீதியில் அல்லது சாதாரண சதக்கா (தர்மம்) என்ற ரீதியில் வழங்கப்படுவதையே நாம் காண்கின்றோம்.  'வக்ப்' என்பது ஒரு பொருள் நிரந்தரமாகவே  சதக்காவின் வழியில் இருந்து தொடர்ந்தும்  அதன் மூலம் பயன் பெறப்பட்டு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகின்றது. ஆகவே, தர்ம காரியங்களுக்கிடையில் 'வக்ப்' என்பது தனித்து நிற்பதை நாம் காணலாம்.

ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் தனக்குக் கிடைத்த ஒரு காணித் துண்டை அது விற்கப்படவோ, யாருக்கேனும் இலவசமாக வழங்கப்படவோ, அணந்தரச் சொத்தாகக் கொள்ளப்படவோ கூடாது என்ற அடிப்படையில் 'வக்ப்' செய்தார்கள் என்பதாக சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம் ஆகிய நூற்களில் பதியப்பட்டுள்ளது.

எனவே, சதக்காவாக கிடைத்த பொருளை விற்பது, வேறொன்றொன்றுக்குப் பிரதியாக மாற்றுவது, இலவசமாகக் கொடுப்பது ஆகிய விடயங்களில் வக்புக்கும், சாதாரண சதக்காவுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதை உணரக் கூடியதாய் உள்ளது. 

பொதுவாக வக்ப் செய்யப்பட்ட பொருளை விற்பது கூடாது என்றிருந்தாலும், அப்பொருள் பாவனைக்கு அருகதையற்றதாகி அதனால் பயன்பெற முடியாத நிலையை அடைந்தால் அதனை விற்றுப் பணமாக்கலாம் என்ற கருத்தை பல இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த சமகால அறிஞர்களில் ஒருவரான அஷ்-ஷைக் வஹ்பத்துஸ் ஸுஹைலி என்பவர் தனது 'அல்-பிக்ஹுல் இஸ்லாமிய்யு வஅதில்லத்துஹ்' என்ற நூலில் மேற்படி விடயம் பற்றி ஷாபிஈ மத்ஹபின் நிலைப்பாட்டை விளக்கும் போது பின்வருமாறு கூறுகின்றார்:

'பள்ளிக்கு வக்ப் செய்யப்பட்ட பாய்கள் உக்கிப்போய், மரக்குற்றிகள் உடைந்துபோய் எரித்து பயன்பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தால் அவற்றை விற்கலாம் என்பதே (ஷாபிஈ மத்ஹபின்) வலுவான கருத்தாகும்.'  (பாகம்: 10, பக்கம்: 7679)

குறித்த பொது அமைப்பு ஒன்றுக்கு வக்ப், சாதாரண சதக்கா, நன்கொடை என எந்த ரீதியில் கிடைத்த பொருளாயினும் அதனை இடம் மாற்றும் போது கொடுத்தவரின் நோக்கத்தையும், அவ்விடத்திற்கான பயனையும் கருத்தில் கொண்டே நாம் செயல்பட வேண்டும்.

எனவே, குறிப்பிட்ட ஒரு பள்ளிவாசலுக்கு கிடைத்துள்ள அல்-குர்ஆன் பிரதிகளில் யாரும் பயன்படுத்தாத நிலையில் மேலதிகமாக தேங்கியிருப்பவைகளை முதலில் விற்றுப் பணமாக்கி அதனை பள்ளியின் தேவைகளுக்காக செலவு செய்ய முயற்சி செய்ய வேண்டும். தனி நபர்களுக்கு அதனைக் கொடுப்பதை தவிர்ப்பது உசிதமானது. எனினும், முன்னைய இரண்டு வழிகளும் அறவே முடியாத நிலை ஏற்பட்டால்  ஒரு விதத்திலும் பயன் பெறாது வீணாகிப் போவதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தைக் கருத்திற் கொண்டு தனி நபர்களுக்கு கொடுக்க முடியும் என்றே தோன்றுகின்றது.

மேலும் ஒரு விடயத்தை நாம் குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அதாவது சில அல்-குர்ஆன் பிரதிகளில் குறித்த ஓரு பள்ளிக்கோ, இடத்திற்கோ என்றில்லாமல் 'وقف لله' (அல்லாஹ்விற்காக வக்ப் செய்யப்பட்டது) என்று பொறிக்கப்பட்டிருக்கும். இவைகளை தனி நபருக்கோ அல்லது ஏதேனும் அமைப்புக்கோ தடையின்றிக் கொடுக்கலாம்.

 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.