சில தனவந்தர்கள் தமது சேமிப்புப் பணத்துக்கு கிடைக்கும் வட்டிப் பணத்தினை என்ன செய்வது என்ற பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே, இப்பணத்தை பொதுத் தேவைகளுக்காகவோ அல்லது தனிப்பட்ட ஒருவரின் மலசலகூட தேவைக்காகவோ பயன்படுத்த முடியுமா?
இது சம்பந்தமான தெளிவான விளக்கம் ஒன்றை தாங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்த

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


வியாபாரம் உட்பட அனைத்து வர்த்தக, வாணிப, கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளிலும் ஒரு முஸ்லிம் தவிர்க்கவேண்டிய அம்சங்களுள் வட்டி பிரதானமானதாகும். எவ்வகையிலும் வட்டித் தொடர்பு வைத்துக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. அத்துடன் அதனைப் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதனைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.


“அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம். மறுமையிலோ) அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அன்-நிஸா : 161)


விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் (உண்மையாக) விசுவாசம் கொண்டவர்களாக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். (அல்-பகரா: 278)

அல்குர்ஆனைப் போன்று ஸன்னாவும் வட்டியின் பாரதூரத்தைப் பற்றி விளக்குகின்றது. வட்டி உண்பதை நபியவர்கள் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிட்டார்கள். இதுபற்றிய ஹதீஸ் பின்வருமாறு:


“நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அவை யாவை? அல்லாஹ்வின் தூதரே! என்று வினவியபோது அண்ணலார் பின்வருமாறு விளக்கினார்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆன்மாவை நியாயமின்றிக் கொலை செய்தல், வட்டி உண்ணல், அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், யுத்தத்தில் புறமுதுகு காட்டுதல், கற்புடைய முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறுதல்.” (புகாரி, முஸ்லிம்)

عن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: (اجتنبوا السبع الموبقات) ، قالوا: يا رسول الله، وما هن؟ قال: الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وأكل الربا، وأكل مال اليتيم، والتولي يوم الزحف، وقذف المحصنات المؤمنات الغافلات؛ متفق عليه.

மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள் என ஜாபிர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

عَنْ جَابِرٍرضي الله عنه، قَالَ: ( لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ ، وَشَاهِدَيْهِ ) ، وَقَالَ: (هُمْ سَوَاءٌ). رواه مسلم


எனவே, வட்டியில் இருந்து தூரமாக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். ஒருவர் தான் அறியாத நிலையில் வட்டியுடன் தொடர்பு வைத்து விட்டால் அவர் தௌபா செய்து மீளுவது அவசியமாகும்.


“ஹராமான பணம் உள்ள ஒருவர், அதை விட்டும் நீங்கி தௌபா செய்ய நாடினால், அப்பணத்தின் உரிமையாளர் அல்லது அவரது பிரதிநிதியிடம் அதனை ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் மரணித்திருந்தால் அவரது அனந்தரக்காரரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் யார் என்பது அறியப்படாமல் இருந்தால் அப்பணத்தைப் பொதுவாக மக்கள் பயனடையும் விதத்தில் பாலங்கள் கட்டுதல், பிரயாணிகள் தங்கும் மடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்காக செலவிடுவது கட்டாயமாகும். அல்லது ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும், இவ்வாறான பணத்தை அழிப்பதோ கடலில் எறிவதோ முறையாகாது, அதனை முஸ்லிம்களின் பொது நலன்களுக்கே செலவிடுவது நல்லது என்றும் பல மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளதாக இமாம் நவவி ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் தனது மஜ்மூஃ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

قَالَ الْغَزَالِيُّ إذَا كَانَ مَعَهُ مَالٌ حَرَامٌ وَأَرَادَ التَّوْبَةَ وَالْبَرَاءَةَ مِنْهُ فَإِنْ كَانَ لَهُ مَالِكٌ مُعَيَّنٌ وَجَبَ صَرْفُهُ إلَيْهِ أَوْ إلَى وَكِيلِهِ فَإِنْ كَانَ مَيِّتًا وَجَبَ دَفْعُهُ إلَى وَارِثِهِ وَإِنْ كَانَ لِمَالِكٍ لَا يَعْرِفُهُ وَيَئِسَ مِنْ مَعْرِفَتِهِ فَيَنْبَغِي أَنْ يَصْرِفَهُ فِي مَصَالِحِ الْمُسْلِمِينَ الْعَامَّةِ كَالْقَنَاطِرِ وَالرُّبُطِ وَالْمَسَاجِدِ وَمَصَالِحِ طَرِيقِ مَكَّةَ وَنَحْوِ ذَلِكَ مِمَّا يَشْتَرِكُ الْمُسْلِمُونَ فِيهِ وَإِلَّا فَيَتَصَدَّقُ بِهِ عَلَى فَقِيرٍ أَوْ فُقَرَاءَ وَيَنْبَغِي أَنْ يَتَوَلَّى ذَلِكَ الْقَاضِي إنْ كَانَ عَفِيفًا فَإِنْ لَمْ يَكُنْ عَفِيفًا لَمْ يَجُزْ التَّسْلِيمُ إلَيْهِ فَإِنْ سَلَّمَهُ إلَيْهِ صَارَ الْمُسَلَّمُ ضَامِنًا بَلْ يَنْبَغِي أَنْ يُحَكِّمَ رَجُلًا مِنْ أهل البلد دينا عالما فان التحكم أَوْلَى مِنْ الِانْفِرَادِ فَإِنْ عَجَزَ عَنْ ذَلِكَ تَوَلَّاهُ بِنَفْسِهِ فَإِنَّ الْمَقْصُودَ هُوَ الصَّرْفُ إلَى هَذِهِ الْجِهَةِ وَإِذَا دَفَعَهُ إلَى الْفَقِيرِ لَا يَكُونُ حَرَامًا عَلَى الْفَقِيرِ بَلْ يَكُونُ حَلَالًا طَيِّبًا وَلَهُ أَنْ يَتَصَدَّقَ بِهِ عَلَى نَفْسِهِ وَعِيَالِهِ إذَا كَانَ فَقِيرًا لِأَنَّ عِيَالَهُ إذَا كَانُوا فُقَرَاءَ  فَالْوَصْفُ مَوْجُودٌ فِيهِمْ بَلْ هُمْ أَوْلَى مَنْ يُتَصَدَّقُ عَلَيْهِ وَلَهُ هُوَ أَنْ يَأْخُذَ مِنْهُ قَدْرَ حَاجَتِهِ لِأَنَّهُ أَيْضًا فَقِيرٌ وَهَذَا الَّذِي قَالَهُ الْغَزَالِيُّ فِي هَذَا الْفَرْعِ ذَكَرَهُ آخَرُونَ مِنْ الْأَصْحَابِ وَهُوَ كَمَا قَالُوهُ ونقله الْغَزَالِيُّ أَيْضًا عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ وَغَيْرِهِ مِنْ السَّلَفِ عَنْ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ وَالْحَارِثِ الْمُحَاسِبِيِّ وَغَيْرِهِمَا مِنْ أَهْلِ الْوَرَعِ لِأَنَّهُ لَا يَجُوزُ إتْلَافُ هَذَا الْمَالِ وَرَمْيُهُ فِي الْبَحْرِ فَلَمْ يَبْقَ إلَّا صَرْفُهُ فِي مَصَالِحِ   الْمُسْلِمِينَ وَاَللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ. (المجموع شرح المهذب)


இவ்வடிப்படையில், வட்டி எனும் கொடிய பாவத்தில் சிக்கிய ஒருவர் தனிப்பட்ட முறையில் மேல் குறிப்பிட்டதன் பிரகாரம் வட்டிப் பணத்திலிருந்து தன்னைச் சுத்தப்படுத்தி, தௌபா செய்து உடனடியாக அதிலிருந்து மீள வேண்டும். அவ்வாறு மீண்டதன் பின் மீண்டும் வட்டி சம்பந்தப்பட்ட எவ்வித கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடாமல் இருப்பது கட்டாயமாகும்.


இதற்கு மாற்றமாக இவ்வாறான வட்டிப் பணங்களை ஒன்று திறட்டி, ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக பிரத்தியேக அமைப்பொன்றை உருவாக்குவது வட்டியை ஊக்குவிப்பதாகவே அமையும் என்பதால், இதைத் தவிர்த்து மக்களுக்கு உதவி செய்யும் நோக்கம் இருப்பின் சதகா போன்ற சுத்தமான பணங்களை மக்களிடமிருந்து எடுத்து தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்க வேண்டும் என ஆலோசனை கூறுகின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.