அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் நிதியைக் கொண்டு அஹதிய்யாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்தலும், இத்தாபனங்களில் கடமையாற்றும் போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்களும் தொடர்பில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எமது ஆலோசனையை வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.07.14 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.
மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் வருமான வழிகள் பற்றி ஆரம்பம் முதல் சந்தேகத்துடன் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. எனினும், நாம் இவ்விடயத்தில் ஆலோசனை கூறு முன் ஊகங்களுக்கு அப்பால் மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் வருமான வழிகள் பற்றி துறைசார்ந்தோரிடம் வினவியும், அதன் சட்டவாக்கத்தை நன்கு ஆராய்ந்தும் பார்த்ததில், அதன் பிரதான வருமான வழியாக லொத்தர் சீட்டிழுப்பு அமைந்திருப்பது தீர்க்கமாக தெரிய வந்துள்ளது. எனவே, இது போன்ற முறையற்ற வழிகளில் நிதிகளை சேர்க்கும் இவ்வமைப்பின் உதவிகளைக் கொண்டு அஹதிய்யாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்வதையும், இத்தாபனங்களில் கடமையாற்றும் போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்குவதையும் நாம் தவிர்த்துக் கொள்வது அவசியம் என்றே நாம் கருதுகின்றோம்.
குறிப்பாக புனித அல்-குர்ஆனை போதிக்கவும், இஸ்லாமிய சட்டங்களையும், ஒழுக்கநெறிகளையும் புகட்டவும் அமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ அல்லது அவைகளை மேம்படுத்த இது போன்ற நிதிகளை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் பொருந்தும் வழியில் நடத்துவானாக!
அல்லாஹ் மிக அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.