பெண் ஆசிரியை ஆண் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆகக் கூடிய வயதெல்லை பற்றிய விளக்கம்; 

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ

பெண் ஆசிரியை ஆண் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆகக் கூடிய வயதெல்லை பற்றிய விளக்கம்; 


பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறு பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே சன்மார்க்க பழக்க வழக்கங்களோடு நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர்க்கப்பட வேண்டும். மாணவர்களை ஒழுக்க சீலர்களாக வளர்க்கும் விடயத்தில் கல்விக்கூடங்களின் பங்களிப்புகளும் அளப்பரியதாகும்.


ஒரு பெண் ஆசிரியை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு - அதாவது பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு இல்லாத, அதைப்பற்றிய அறிவில்லாத சிறார்களுக்குக் - கல்வி கற்றுக் கொடுப்பதில் தவறில்லை. இருப்பினும், அம்மாணவர்கள் எப்பொழுது பருவ வயதை அடைவார்களோ அல்லது பருவ வயதை அண்மித்து, பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு உண்டாகும் வயதை அடைவார்களோ அப்பொழுது அவர்களுக்கு ஆண் ஆசிரியர்களைக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நியமித்தல் வேண்டும்.


அல்லாஹ தஆலா அல்-குர்ஆனில் பெண்கள் தங்களது அழகை மறைக்கத் தேவையில்லாத ஆண்களைப் பட்டியலிடும் போது பின்வருமாறு கூறுகின்றான்.


(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு
ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.” (சூறதுன் நூர் : 31)


இந்த ஆயத்தின் மூலம், பெண்களின் மறைவான அவையங்களை அறிந்துகொள்ளக் கூடிய (மஹ்ரமில்லாத) பருவ வயதை அடையாத, ஆண்பிள்ளைகளுக்கு, பெண்கள் தமது அழகை வெளிப்படுத்துவது கூடாது என்பது தெளிவாகின்றது.


இமாம் ஜலாலுத்தீன் அல்-மஹல்லி ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் மின்ஹாஜுடைய விரிவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.


“பருவ வயதை அண்மித்த சிறுவர்கள், மஹ்ரமில்லாத பெண்களைப் பார்ப்பதை விட்டும் தடுப்பது, அச்சிறுவர்களின் பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.”

وقال المحلي في شرح المنهاج : فيلزم الولي منعه من النظر إلى الأجنبية فيلزمها الاحتجاب منه لظهوره على العورات بخلاف طفل لم يظهر عليها، قال الله تعالى: أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء.


இவ்வடிப்படையில் நோக்கும் போது, பருவம் அடைந்த ஆண் மாணவர்களுக்கு மஹ்ரமில்லாத பெண் திரையின்றி கற்பிப்பது கூடாதது போன்று, பருவம் அடையும் வயதை அண்மித்துள்ள ஆண் மாணவர்களுக்கும் பெண் ஆசிரியை திரையின்றி கற்பிப்பது கூடாது என்பது தெளிவாகின்றது.


பருவம் அடைய அண்மித்த வயது என்பது பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வயதாகும். இக்கூற்றுக்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.


‘உங்கள் பிள்ளைகள் 7 வயதாகும் பொழுது தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். 10 வயதாகியும் அவர்கள் தொழாவிட்டால் அவர்களை அடித்துத் தொழ வையுங்கள். மேலும், அவர்களை படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.’ என்று நபி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாக அம்ருப்னு சுஐப் (றழியல்லாஹ{ அன்ஹ{) அறிவிக்கின்றார்கள். (சுனன் அபீதாவுத் - 495)

عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم " مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع " سنن أبي داؤود" رقم الحديث : 495 

ஒரு சிறுவன் எத்தனை வயதை அடைந்தால் அச்சிறுவனை விட்டும் பெண் தன்னை மறைக்க வேண்டும் என இமாம் அஹ்மத் ரஹிமஹ{ல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்ட போது பத்து வயது என்று கூறினார்கள்.

قد جاء في الشرح الكبير لابن قدامة: قيل لأبي عبد الله: متى تغطي المرأة رأسها من الغلام؟ قال: إذا بلغ عشر سنين (كتاب النكاح)


பதினைந்து வயது பூர்த்தியாகுதல் அல்லது ஸ்கலிதம் ஏற்படுதல் இவற்றுடன் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுதல் அல்லது கருத்தரித்தல் என்பவை பருவ வயதை அடைந்தமைக்கான அடையாளங்களாகும்.

والبلوغ باستكمال خمس عشرة سنة أو خروج المنى ووقت إمكانه استكمال تسع سنين ونبات العانة يقتضي الحكم ببلوغ ولد الكافر لا المسلم في الأصح وتزيد المرأة حيضا وحبلا. "كتاب الحجر – منهاج الطالبين"


எனவே, பருவமடைந்த அல்லது பருவ வயதை அண்மித்த ஆண் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண் மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகளும் நியமிக்கப்படல் வேண்டும்.


எனினும், சூரத்துல் பாதிஹா போன்ற கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள், மற்றும், திரைக்குப் பின்னால் இருந்து கற்றுக் கொடுப்பது சிரமமாக இருக்கும் கைத்தொழில்கள் ஆகிய விடயங்களில் மாத்திரம், பெண்களுக்கு மஹ்ரமான ஆண்களோ அல்லது ஆண்களுக்கு மஹ்ரமான பெண்களோ கற்பிப்பதற்கு இல்லாத சந்தர்ப்பங்களில் திரையின்றிக் கற்றுக்கொடுக்க அனுமதியுண்டு என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ


அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.